தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் கடந்த கடந்த 2020 ம் ஆண்டு முதல் அகழாய்வு பணிகள் தொடர்ந்து மூன்று வருடங்களாக நடந்து வருகிறது. இந்த வருடம் மூன்றாம் கட்ட அகழாய்வு பணிகள் நடந்து வருகிறது.
இந்த நிலையில் கடந்த வருடம் சிவகளை ஸ்ரீ பராக்கிரமபாண்டி திரடு பகுதியில் நடந்த அகழாய்வு பணியில் செங்கலால் கட்டப்பட்ட வடிகால் கண்டுபிடிக்கப்பட்டது. இதன் காலம் விரைவில் தெரிய வரும் என்று அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இந்த நிலையில் இன்று சட்டமன்றத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் 110 விதிகளின் கீழ் அறிவிப்பினை வெளியிட்டார். அப்போது அவர் பேசுகையில், சிவகளையில் கடந்த 2021ம் ஆண்டு நடந்த அகழாய்வு பணியில் நீர் செல்லும் வடிகால் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த வடிகால் நன்னீர் செல்வதற்காக அமைக்கப்பட்டதாகவும், இந்த செங்கல் வடிகால் வழியாக தேக்கி வைக்கப்பட்ட நீர்நிலையிலிருந்து கொண்டுவரப்பட்டதாக ஆய்வில் தெரியவருகிறது என்று அவர் தெரிவித்தார். மேலும் கடந்த வருடமே பாண்டியனின் தலைநகராவும், துறைமுகப்பட்டிணமாகவும் விளங்கிய கொற்கை பகுதியில் கடல் சார் ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. அதன் முதல் பகுதியாக இந்த மாதமே நுண்கல ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று அவர் தெரிவித்தார். இதனால் தென்மாவட்ட பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.


