வல்லநாடு அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவிலில் ஐப்பசி பெளர்ணமி அன்னாபிஷேக விழா நடந்தது. இதில் வல்லநாடு மற்றும் சுற்று கிராம மக்கள் திரளாகக் கலந்து கொண்டு அன்னாபிஷேக தரிசனம் செய்தனர். உலக உயிர் இனங்களுக்குப் பசிப்பிணி போக்கும் பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகச் சிவாலயங்களில் ஐப்பசி பெளர்ணமி நாளில் ஆண்டுதோறும் அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது.இந்த நாளில் சிவாலயங்களுக்குச் சென்று சிவபெருமானைத் தரிசனம் செய்தால் இறைவனருள் இனிதே கிடைக்கும் என்பது சிவ பக்தர்களின் நம்பிக்கை. இதனால் வல்லநாடு அருள்மிகு ஆவுடை அம்பாள் உடனுறை திருமூலநாதர் திருக்கோவிலில் ஆண்டுதோறும் ஐப்பசி பெளர்ணமி நாளில் அன்னாபிஷேக வெகு விமரிசையாக நடைபெறும் கோவிலைச் சுற்றியுள்ள வயல்களுக்குச் சொந்தக்கார விவசாயிகள் தங்கள் வயல்களில் விளைந்த புது நெல் தரும் அரிசியை சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் செய்ய மகிழ்ச்சியுடன் வழங்குவர் அதன் படி இந்த ஆண்டும் அன்னாபிஷேக விழா சிறப்பாக நடந்தது. இதனை முன்னிட்டுக்காலையில் பாரதிய ஜனதா கட்சி செயலர் பரமசிவம் குடும்பத்தார் சார்பில் கும்பபூஜை நடந்தது. பின்னர் மதியம் கோவில் அர்ச்சகர் சண்முகசுந்தரம் தலைமையில் வெங்கடேச பட்டர், ஹரி பட்டர் ஆகியோர் அன்னாபிஷேக பூஜைகள் நடத்தினர் சுவாமி மற்றும் அம்பாள் அன்னாபிஷேக அலங்காரத்தில் சிவ அன்பர்களுக்கும் பக்தர்களுக்கும் காட்சி அளித்தது கண்டு தென்னாடுடைய சிவனே போற்றி அன்னாபிஷேக அருளே போற்றி என பக்தி கோஷமுழக்கமிட்டனர். அன்னாபிஷேக விழாஏற்பாடுகளை திருமூலநாதர் பக்தர் பேரவை செய்திருந்தனர்


