விடியல் டிரஸ்ட் நிறுவனமானது விளாத்திகுளம் பகுதியை மையமாக கொண்டு நபார்டு வங்கியுடன் இணைந்து தூத்துக்குடி மாவட்டம் புதூர் ஒன்றியம் சின்னூர் பஞ்சாயத்து கிராமங்களுக்குட்பட்ட பகுதிகளில் நீர் வரத்து கால்வாய் அமைத்தல், ஊரணி ஆழப்படுத்துதல் போன்ற பொது பணிகளையும், தனிநபர் நிலங்களில் பண்ணை குட்டை அமைத்தல், வேளாண் காடுகள் வளர்த்தல் (Agro Forest) திட்ட பணிகள் மூலமாக நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்தும் நோக்கில் சேவை செய்து வருகிறது. மேலும் விவசாயிகளுக்கு விதை நேர்த்தி செய்தல், நுண்ணூட்ட உர மேலாண்மை போன்ற திறன் மேம்பாட்டு பயிற்சிகளையும் கொடுத்து பணி செய்து வருகிறது.
இன்றைய தினம் நபார்டு வங்கி, விடியல் டிரஸ்ட் நிறுவனத்தின் மூலமாக செயல்படுத்திய செயல்பாடுகளை பார்வையிடுவதற்காக திரு. R. சங்கர் நாராயண், நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர், திருநெல்வேலி – நபார்டு வங்கி துணை பொது மேலாளர் திரு. R. சுரேஷ் ராமலிங்கம், தென்காசி கிளை நபார்டு வங்கி துணை பொது மேலாளர் திரு. சசி குமார் ஆகியோர் சின்னூர் நீர்வடிப்பகுதிக்கு வந்திருந்தார்கள். இந்த நிகழ்வினை விடியல் டிரஸ்ட் நிறுவன தலைவர் முனைவர். திரு. K. ஜோதிமணி, மற்றும் விடியல் டிரஸ்ட் பணியாளர்கள் மற்றும் நீர்வடிப்பகுதி குழு தலைவர் திரு. அருண் ஆகியோர் ஒருங்கிணைப்பு செய்திருந்தனர். நிகழ்வில் நீர்வடிப்பகுதி குழு தலைவர் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள், விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் பங்கேற்றனர்.
முன்னதாக சூரிய மின் உலர்த்தியை திறந்து வைத்து விழா மேடையில் பேசிய முதன்மை பொது மேலாளர் திரு.R. சங்கர் நாராயண் நீரின் சேமிப்பு அவசியத்தையும் நீர்மட்டத்தை உயர்த்த நபார்டு சேவை செய்வதையும் கூறினார் மேலும் சூரிய மின் உலர்த்தி மூலம் உலர்த்தப்பட்ட மிளகாய் வற்றல் மூலம் விவசாயிகளுக்கு நல்ல விலை கிடைக்கும் எனவும் கூறினார். நிகழ்ச்சியில் மரக்கன்று நடும் நிகழ்வும் மேற்கொள்ளப்பட்டது. விவசாயிகளுக்கு மரக்கன்றுகள், பழக்கன்றுகள் வழங்கப்பட்டன. சுய உதவி குழு பெண்களுக்கு நாட்டுக் கோழிகள் வழங்கப்பட்டன. பெண் விவசாயிகளுக்கு நுண்ணூட்ட உரங்கள் வழங்கப்பட்டன. இறுதியாக நபார்டு வங்கி முதன்மை பொது மேலாளர் மற்றும் துணை பொது மேலாளர் திரு. R. சுரேஷ் ராமலிங்கம், தென்காசி கிளை நபார்டு வங்கி துணை பொது மேலாளர் திரு. சசி குமார் ஆகியோர் தனி நபர் நிலத்தில் அமைக்கப்பட்ட பண்ணை குட்டையை பார்வையிட்டனர். இறுதியாக நீர்வடிப்பகுதி திட்ட மேலாளர் திரு.M.அசோக் குமார் பங்கேற்பு செய்த அனைவருக்கும் நன்றி கூற நிகழ்வு இனிதே நிறைவுற்றது.


