தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள சிவகளையில் கடந்த மே 25ம் தேதி மாநில தொல்லியல் துறை சார்பில் அகழாய்வு பணியானது துவங்கியது.
இந்த பணியில் 10 தொல்லியல் அதிகாரிகள் மற்றும் ஆய்வு மாணவர்களும் சிவகளை பகுதியை சேர்ந்த 80 பொதுமக்களும் பணியில் ஈடுபட்டுள்ளனர். சிவகளை பரம்பு பகுதியில் 50 குழிகள் அமைக்கப்பட்டு ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இதில், தற்போது வரை 31 முதுமக்கள் தாழிகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சிவகளையில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட முதுமக்கள் தாழியில் உள்ள எலும்பு மற்றும் பழங்கால பொருட்களை டிஎன்ஏ பரிசோதனை செய்வதற்காக எலும்புகளை சேகரிக்கும் பணி கடந்த மாதம் 17ம் தேதி துவங்கியது. இந்த பணியில் மதுரை காமராஜர் பல்கலைக்கழக பேராசிரியர் பிச்சப்பன், தொல்லியல் துணை இயக்குனர் முனைவர் சிவானந்தம் கொண்ட குழுவினர் டிஎன்ஏ பகுப்பாய்வு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இங்கு எடுக்கப்படும் எலும்புகள் மதுரை காமராஜர் பல்கலைக்கழக ஆய்வகத்தில் வைத்து ஆய்வு செய்து அதன் காலம் மற்றும் வயதை கண்டறிய உள்ளனர். மேலும் அந்த காலத்தில் வாழ்ந்த மக்கள் எப்படி இறந்தார்கள் என்பதையும் ஆய்வு செய்ய உள்ளனர்.
இதற்கிடையில் கிடைத்த முதுமக்கள் தாழிகளில் உள்ள பொருட்களை எடுத்த போது முதுமக்கள் தாழியில் இருந்து நெல்மணிகள், அரிசி, தாடை எலும்புகள், தாடையுடன் சேர்ந்த பற்கள், பற்கள் எலும்புகள், சாம்பல் போன்ற பொருட்கள் கிடைத்துள்ளது. இதனை டிஎன்ஏ பகுப்பாய்வு செய்யும் போது சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னதாக நமது பண்பாடு என்பது இருந்தது என்பது தெரியவரும் என்று ஆய்வாளர்களும், சமூக ஆர்வலர்களும் தெரிவித்துள்ளனர்.