பிறப்புச் சான்றிதழில் பெயர் சேர்க்க அரசு வழங்கியுள்ள சிறப்புச் சலுகையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
பிறப்புச் சான்றிதழில் இதுவரை பெயர் பதிவு செய்யப்படாத குழந்தைகள் மற்றும் 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் சேர்க்க அரசு வழங்கியுள்ள சிறப்புச் சலுகையைப் பொதுமக்கள் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் எனத் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் ப்ரியங்கா தெரிவித்துள்ளார்.
இது குறித்துத் ஆணையர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “பிறப்பு சான்றிதழ் என்பது ஒவ்வொரு குழந்தைக்கும் மிகவும் முக்கியமான அடிப்படை ஆவணமாகும். பிறப்பு மற்றும் இறப்பு பதிவுச் சட்டத்தின்படி, குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பைப் பதிவு செய்திட வேண்டும். அவ்வாறு பதிவு செய்யப்படும் பிறப்புகளுக்குச் சான்றிதழ் இலவசமாக வழங்கப்படுகிறது. குழந்தையின் பெயர் பிறப்புச் சான்றிதழில் பதிவு செய்யப்பட்டால் மட்டுமே அச்சான்றிதழ் முழுமையானதாக அமையும்.
பெயர் சேர்ப்பதற்கான காலவரம்பு:
21 நாட்களுக்குள் – பிறப்பு பதிவு இலவசமாக மேற்கொள்ளலாம்.
12 மாதங்களுக்குள் – எழுத்துப்பூர்வ உறுதிமொழியுடன் குழந்தையின் பெயரை இலவசமாக சேர்த்துக் கொள்ளலாம்.
12 மாதம் முதல் 15 ஆண்டுகள் வரை – உரிய தாமதக் கட்டணத்துடன் பெயரை சேர்த்துக் கொள்ளலாம்.
15 ஆண்டுகளுக்கு மேல் – தற்போது அரசு வழங்கியுள்ள சிறப்பு சலுகையின் கீழ் 26.09.2026 வரை பெயரை பிறப்புச் சான்றிதழில் சேர்த்துக் கொள்ளலாம்.
தேவையான ஆவணங்கள்:
பிறப்புச் சான்றிதழ் நகல்
பள்ளிச் சான்றிதழ் நகல்
ஆதார் அட்டை நகல்
வாக்காளர் அடையாள அட்டை நகல்
குடும்ப அட்டை நகல்
விண்ணப்பிக்க வேண்டிய இடங்கள்:
தூத்துக்குடி மாநகராட்சி தலைமை அலுவலகம் மற்றும் அனைத்து வார்டு அலுவலகங்களிலும் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
எனவே, பிறப்புச் சான்றிதழில் இதுவரை குழந்தையின் பெயர் பதிவு செய்யப்படாத பெற்றோர்கள், குறிப்பாக 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய பிறப்புச் சான்றிதழ்களில் பெயர் சேர்க்க வேண்டியவர்கள், அரசு வழங்கியுள்ள இச்சிறப்பு வாய்ப்பினை 26.09.2026-க்குள் தவறாமல் பயன்படுத்திக் கொள்ளுமாறு தூத்துக்குடி மாநகராட்சி ஆணையர் கேட்டுக்கொண்டுள்ளார்.


