நன்றி நெல்லை டைம்ஸ் நாளிதழ் மற்றும் பொறுப்பாசிரியர் திரு தம்பான் அவர்கள்.
தாமிரபரணி துணை நதியான சிற்றாறு கரையில் மஞ்சள் மழையும், கடனா நதி கரையில் பன்னீர் மழையும் பொழிகிறது என நாம் கடந்த தொடர்களில் பார்த்தோம். தற்போது தாமிரபரணி ஆற்றங்கரையில் கல்யாண தீர்த்தம் அருகில் பௌர்ணமி, அமாவாசை , தமிழ் வருட பிறப்பில் சந்தன மழை பொழிகிறது என்பதை கேள்விப்பட்டு அங்கும் பயணித்தோம்.
பாபநாசம் வழியாக அகத்தியர் அருவி சென்று அதன் மேலே ஏறினால், கல்யாண தீர்த்தம் உள்ளது. அதன் முன்பு சிவன் ஆலயம் ஒன்று உள்ளது. அதில் தமிழ்மாத பிறப்பு மற்றும் அமாவாசை, பவுர்ணமி ஆகிய காலங்களில் இரவு 12 மணி அளவில் பன்னீர்மழை பொழிகிறது. இதை அறிந்து பூஜை செய்யச் செல்பவர்கள் மிக அதிகம்பேர். அந்தச் சமயத்தில் தேவர்களும், முனிவர்களும் இங்கு வந்து பூஜை செய்கிறார்கள். இந்த இடத்தில் சந்தனமழை பெய்யும் இடம்’ என்று எழுதியும் வைத்து உள்ளனர். அதிகமான பக்தர்கள் வந்து பூஜையில் கலந்துகொண்டு சந்தன மழையை உணர்ந்து பேசுவதால், இது நம்பக்கூடிய சம்பவமாகவே உள்ளது. ஆனாலும் புரியாத புதிராக இருக்கும் இந்த நிகழ்ச்சியை உணர்ந்து பார்க்கும்போது ஆனந்தமாகவே இருக்கிறது!
கல்யாண தீர்த்தத்தில் உள்ள சிவனை வணங்க எப்படிக் கூட்டம் வருகிறதோ, அதுபோலத்தான் பாணதீர்த்தம் மேலே உள்ள மகிஷாவர்த்தினி மரத்துக்கும் சென்று படையல் போட்டு வணங்கிவிட்டு இரவில் அங்கேயே தங்கி ‘சந்தனமழை’ பெய்வதை உணர்ந்தவர்கள் பலர். தற்போது இவ்விடமெல்லாம் வனத்துறை மூலம் தடை செய்யப்பட்ட பகுதியாக மாறி விட்டது. எனவே தற்போதைய தலைமுறையினருக்கு இவ்விடம் செல்ல போதிய வாய்ப்பு இல்லை.
02.01-2007 அன்று இரவு. நான் கல்யாண தீர்த்தம் பவுர்ணமி பூஜையில் கலந்துகொள்ள புறப்பட்டேன். அந்தப் பயணத்திற்காக நான் காத்துக்கிடந்த நாட்கள் ஆறு வருடங்கள். இந்தப் பயணத்தில் எனக்கு உதவியாக இருந்தது பட்டு, தெனாலி என்ற எனது பக்கத்து விட்டு சகோதரர்கள். அப்போது அவர்கள் சிறுவர்களாக இருந்தனர். அவர்கள் என்னை பவுர்ணமி பூஜைக்கு அழைத்துச் செல்லும் அளவுக்குப் பக்குவம் அடைந்தவர்களாக இருக்கிறார்களே என்பதை அவர்களோடு செல்லும்போதுதான் நான் தெரிந்துகொண்டேன்.
நள்ளிரவு 12 மணிக்கு, பொதிகை அடியில் செக்போஸ்ட்டில் எங்கள் கார் நின்றது. காவல் அதிகாரிகள் “இந்த வேளையில் கார் மேலே செல்ல முடியாது!” என்று கூறினர். நான் அவர்களிடம், பவுர்ணமி பூஜை நடைபெறும்போது வாகனங்கள் செல்ல அகத்தியர் அருவி வரை இலவச அனுமதி உண்டு என கூறினார்களே. அதையே நான், நெல்லை தமிழ் முரசில் ‘நதிக்கரையோரத்து அற்புதங்கள்’ தொடருக்கு காவல் அதிகாரியிடம் பேட்டி எடுத்தபோது கேட்டுத் தெரிந்துகொண்டு அந்தத் தகவலை தொடரில் குறிப்பிட்டு இருந்தேன். ஆனால் தற்போது மறுக்கிறீர்களே!” என்று கேட்டேன். அமைதி காத்த அவர்களிடம் நான் பத்திரிகையாளர் அடையாள அட்டையைக் காண்பித்தேன். நான் கட்டுரையில் எழுதிய தகவலையும் கூறினேன். உடனே அவர் “ஆன்மிகப் பயணம் என்ற வகையில் நாங்கள் வாகனங்களை உள்ளே செல்ல அனுமதித்தது உண்மைதான். ஆனால், பலர் பக்தி என்ற பெயரில் பல தவறுகள் செய்யத் தொடங்கிவிட்டனர். அதனால்தான் தற்போது அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது. இப்போது நீங்கள் போகலாம்” என்று சொல்லிவிட்டு, எங்களது காரை மேலேசெல்ல அனுமதித்தார்.
அகத்தியர் கோயில் அருகே காரை நிறுத்திவிட்டு, நாங்கள் மட்டும் அகத்தியர் அருவியை நோக்கிப் புறப்பட்டோம். பூஜைநேரம். ஆட்கள் நடமாட்டம் இல்லை. மார்கழி மாத குளிர் வாட்டும் என நினைத்தோம். ஆனால், நாங்கள் பயந்தபடி எதுவும் நடக்கவில்லை. நள்ளிரவு 12 மணிக்குக் அகத்தியர் அருவியில் குளிக்கும் அனுபவம் எங்களுக்கு மிக வித்தியாசமாக இருந்தது. யாரும் இல்லாத இடத்தில் அந்த இருட்டில் வானத்தில் இருந்து வெள்ளியை உருக்கி விட்டார் போல அகத்தியர் அருவி விழுந்து கொண்டிருந்தது. நன்றாக குளித்தோம். குளிரும் இல்லை. வேறு தொந்தரவும் இல்லை. குளித்து முடித்தவுடன் அருகில் இருந்த பிள்ளையாருக்கு பூஜை செய்தோம்.
நாங்கள் ஆறு பேர் சென்று இருந்தோம். அதில் 65 வயதுடைய மூதாட்டி ஒருவரும் எங்களுடன் வந்தார். கல்யாண தீர்த்தம் நோக்கி படியில் ஏறினோம். சுமார் 10 நிமிடம் நடந்தோம். அங்கே பெண் சாது கிருஷ்ணவேணி அம்மா தங்கி அருள் பாலிக்கும் குகை இருந்தது. அந்த குகையில் சாது கிருஷ்ணவேணி அம்மாவை தேடினோம். அவரை காணவில்லை. நமக்கு பிராப்தம் இருந்தால் வரும் போது கிருஷ்ணவேணி அம்மா தரிசனம் தருவார் என்றார் உடன் வந்தவர். தொடர்ந்து கல்யாண தீர்த்தம் நோக்கியப் படி வழியாக கீழே இறங்கினோம். அங்கே, கோடி லிங்கேஸ்வரர்- லோகநாயகி- அகத்தியர் அலங்காரம் முடிந்த நிலையில் பவுர்ணமி பூஜைக்காகத் தயாராகிக்கொண்டு இருந்தனர். இந்த நாள் திருவாதிரை திருநாள் என்பதால்
நடராஜரும் பூஜைக்குத் தயாராகிவிட்டார். சுமார் 100 பேர் ஆங்காங்கே பூஜையை காண காத்து இருந்தனர். அதோடு மட்டுமல்லாமல் சந்தனமழை நம் மீதுபொழிய வேண்டும் என சித்தர்களை நோக்கி தவம் இருந்தனர் பலர். என் வாழ்க்கையில் மிகவும் நல்ல நாள். 2007-ம் ஆண்டு, முதல் பவுர்ணமி பூஜையில் திருவாதிரை தினத்தில் இங்கு வருவதற்குத்தான் ஆறு வருடம் காத்திருந்தோம் என்று நினைக்கும்போது எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது. இங்குதான் தேவர்களும், முனிவர்களும் பூஜை செய்ய பவுர்ணமி மற்றும் தமிழ் மாத பிறப்புக்கு வருவார்கள். அப்போது சந்தன மழை பொழியும் என கூறக் கேட்டு இருந்தேன். தற்போது அதை உணரத் தயாரானேன்.
பூஜை செய்பவர் கல்யாண தீர்த்தம் தடாகத்திற்குள் நுழைந்தனர். அங்கு தாமிரபரணி நதிக்கு பூஜையை நடத்தினார். பின் பாறையில் செதுக்கப்பட்ட சிற்பங்களுக்கு பூஜை செய்தனர். அதன்பின் அவர்கள் தடாகத்தினை விட்டு மேலே வந்தனர். அங்கு கல்யாண தீர்த்தத்தின் மேலே உள்ள கோயிலில் உள்ள சிவன், அகத்தியர், சக்தி ஆகியோருக்கு பூஜை செய்தனர். நான் சென்ற அந்த நாளில் கல்யாண தீர்த்தம் சிவகுரு மாதாந்திர பவுர்ணமி பூஜைக் குழு 25-வது ஆண்டு வெள்ளிவிழா மலர் வெளியிட்டு இருந்தனர். அற்புதமான பூஜை நடந்தது. சந்தன மழையை உணர்ந்தவர்கள் பலர் இருந்தனர். அவர்கள் அதுகுறித்து பல நிகழ்வுகளைச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
என்னோடு வந்திருந்த திருப்பதி, “நானும் அந்த பூஜைக்கு வந்து இருந்தேன். ராத்திரி பவுர்ணமி பூஜையில் பாறை இடுக்கு உள்ளே சென்று அகத்தியர் பாதத்தைப் பார்த்தோமே. அப்போது கல்யாண தீர்த்தத்தில் இருந்து தாமிரபரணி பூ மழையாய், தூவானமாய் நம்மீது பெய்தாளே..! அதை மறந்துவிட்டீரா? அதை அனுபவிச்ச நான், கொடுத்துவைத்தவன். இனிமேல் அந்த அற்புதத்தை எப்போது உணர முடியும்!?” என்றார்.
சிவன்-பார்வதி கைலாயமலையில் செய்துகொண்ட திருமணத்தை அகத்தியருக்கு பொதிகை மலையில் காட்டினார், என்கிறது புராணம். அகத்தியருக்கு சிவபெருமான் காட்டிய இந்த இடம்தான் கல்யாண தீர்த்தம். இதற்கு ‘சிங்க தீர்த்தம்’ என்ற பெயரும் உண்டு. பல ஆயிரம் வருடங்களுக்கு முன்பே அகத்தியர், இமயமலையில் நடந்த திருமணத்தை இங்கு நேரடி தரிசனமாகப் பெற்று இருக்கிறார். அதற்கான பண்டிகையை சித்திரை விசு என்று கொண்டாடுவார்கள். விசு என்றால் பார்வை. (விசு & -விஷன்) இரண்டுக்கும் அர்த்தம் பார்வைதான். இந்த இடத்தில் கல்யாண தீர்த்தம் பாறை அகன்ற சினிமாஸ்கோப் திரைபோலவே காட்சியளிக்கிறது. இங்குதான் அந்த காலத்தில் கல்யாண காட்சியை அகத்தியருககு தெரிந்திருக்கவேண்டும்.
கல்யாண தீர்த்தத்தில் கூட்டம் இல்லை. இங்கு தண்ணீர் விழுவது வெளியே தெரியாத காரணத்தினாலும், பாறைகள் இடுக்கின் வழியே தண்ணீர் வந்து வெளியே விழுவதாலும் சுற்றுலா பயணிகள் இங்கு குளிப்பது குறைவுதான். ஆன்மீக சுகம் தேடி வருபவர்கள் மட்டுமே இங்கு வருவார்கள். கோடி லிங்கேஸ்வரர், லோகநாயகி மற்றும் அகத்தியரை வணங்குகிறார்கள். அகத்திய மாமுனிவர் இங்கு வாசம் செய்வதாக ஆன்மிகவாதிகள் நம்புகிறார்கள். கோயில் அருகே உள்ள பள்ளத்தாக்கில் தியானம் செய்யவும் பலர் இங்கு வருகிறார்கள். பாறை இடுக்கு உள்ளே பள்ளத்தில அகத்தியர் பாதம் உள்ளது. அதை காணவும் பூஜை செய்யவும் பல பக்தர்கள் பாதை இடுக்கு வழியாக நடந்து சென்றனர். அமைதியான அருவிச் சத்தமும், ஜில்லென்று விழும் தூறலும், இனிமையாகக் காட்சி அளிக்கும் இயற்கையும் நம் மனதுக்கு ஆறுதலையும் அமைதியையும் தருகிறது. அதுவே சொர்க்கம்தானே! இரவில் நாம் பார்த்த இந்த இடம், பகலில் பார்க்கும்போது ஏதோ. தேவலோகம் போலவே காட்சியளிக்கிறது. அதையும் நான் பார்த்து, ரசித்து, வியந்து இருக்கிறேன்.
என் வாழ்வில் இந்த இடத்தில்தான் முதன் முதலில் அகத்தியரை உணர்ந்தேன்! அதை நினைக்கும்போதே எனக்குப் புல்லரிக்க ஆரம்பித்தது! எனது படைப்புலக வழிகாட்டி நெல்லை வரதன்’ அவர்கள் மூலமாக நெல்லை தமிழ்முரசு இதழில் ‘நதிக்கரையோரத்து அற்புதங்கள் தொடர் எழுத ஆரம்பித்தேன். “பொதிகை மலை என்றாலே அகத்திய பெருமான்தான். அகத்தியரைப் பற்றி நிறைய எழுதுங்கள்” என்று கூறினார்கள். நான் அகத்தியரைப் பற்றி தகவல் தேடினேன். எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. எனவே கல்யாண தீர்த்தம் வந்தோம். என்னோடு, உச்சிமகாளி சுவாமி, வழக்கறிஞர் பாரதிமுருகன், அப்போதையை தினகரன் நிருபர்ஆபேல்சேத், விக்கிரமசிங்கபுரம் ஆன்மீகவாதி பெருமாள்சாமி அய்யா ஆகியோர் அங்கிருந்தோம். அப்போது அகத்தியப்பெருமானை நினைத்து உருகி நின்றேன். அன்று எனக்கு அகத்திய பெருமான் அருள் செய்ததினால் அந்தத் தொடர் 200 வாரத்தைக் கடந்து வெற்றிமுரசு கொட்டியது. பிற்காலத்தில் தாமிரபரணி வரலாற்றில் மிக எளிமையான 1000 பக்கத்தில் தலைத்தாமிரபரணி என்ற நூலாக வெளிவந்தது. காவ்யா பதிப்பகம் வெளியிட்ட இந்த நூல் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நூலகத்திலும் உள்ளது. பொதிகை மலையை பற்றி மட்டுமே விகடன் பிரசுரத்தில் எழுதிய “சித்தர்களின் சொர்க்கபுரி பொதிகை மலை” என்ற நூலில் விரிவாக எழுதியுள்ளேன். அந்த நூல் 10 ஆயிரத்துக்கு மேல் பிரதி விற்று என்னை பெருமைபடுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு மட்டுமல்லாமல் அந்த நூலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு நூலகத்திலும் உள்ளது.
இவ்விடத்தில் இரட்டை லிங்கம் ஒன்று குகைக்குள் தென்பட்டது . அங்கேயும் சென்று பூஜை செய்துள்ளோம். அங்குள்ள லிங்கம் ஒன்று நெட்டையாகவும், மற்றொன்று குட்டையாகவும் விளங்கும். இதை கைலாசமலை லிங்கம் மற்றும் திருவண்ணாமலை லிங்கத்துக்கு ஒப்பானது என்றார்கள்.
1992 ல் அடித்த வெள்ளத்தில் இங்கிருந்த கோடீலிங்கேஸ்வரர் சிலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டது. அதன் பிறகு இவ்வித்தில் அகத்தியர் லோகமித்திரை சிலையை பிரதிட்சை செய்தார்கள். அதன் பிறகு அவ்விடம் மேலும் மகுடம் சூட்டியது போல இருந்தது. அகத்தியர் லோகமித்திரை பின்புறம் விழும் கல்யாண தீர்த்தம் ஏதோ தேவலோகம்போல காட்சியளித்தது.
அதை காண கண்கோடி வேண்டும். ஆனால் தற்போது அகத்தியர் தம்பதியினர் சிலை இங்கு இல்லை. அதற்கு காரணம் தான் என்ன? . இந்த இடத்தில் சோகமான வரலாற்று நிகழ்வு ஒன்று நடந்துள்ளது . அந்த நிகழ்வு தான் என்ன?
(பொருநை ரகசியத்தினை தேடி பயணிப்போம்)


