ஓட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் குடும்பம். செல்வச் செழிப்பும். உதவும் உள்ளமும் கொண்ட உலகநாத பிள்ளை பரமாயி தம்பதியினருக்கு மூத்த மகனாக 1872 செப்டம்பர் 5 இல் பிறந்தார் சிதம்பரனார். நான்கு தம்பிகள் இரண்டு தங்கைகள் பெரிய குடும்பமாதலால் பண்போடு பாசமுடன் வளர்ந்து வரலாயினர்.
இளம் வயதில் தூத்துக்குடி புனித சவேரியார் பள்ளியில் கல்வி கற்றார். பள்ளியில் படிக்கும் போது சிதம்பரனாருக்கு ஏராளமான மாணவர்கள் நண்பர்களாயினர். திருச்சியில் சட்டக்கல்வியைப் படித்து 1895 இல் வழக்கறிஞரானார்.
இந்தியாவில் மாபெரும் தியாகங்களைச் செய்து கொண்டிருந்த இயக்கங்களால் ஈர்க்கப்பட்டார் வ.உ.சி. பாலகங்காதர திலகர். லாலா லஜபதிராய். விமின் சந்திரபால் போன்ற தலைவர்களின் உணர்ச்சி மிக்க பேச்சுகளால் கவரப்பட்டு தீவிரவாத சிந்தனை கொண்ட பாலகங்காதர திலகரைத் தம்முடைய குருவாகக் கொண்டு சுதேசி இயக்கத்தில் தம்மை இணைத்துக் கொண்டார்.
தூத்துக்குடி துறைமுகம் ஆங்கிலேயரின் வியாபாரத்தை அபிவிருத்தி செய்வதற்கும். அதிகாரத்தை பிற நாடுகளில் செலுத்துவதற்கும் மிகவும் உறுதுணையாக இருந்தது.
இலங்கைக்கு கப்பல் போக்குவரத்தை பிரிட்டிஷ் இந்தியா நேவிகேசன் கம்பெனி நடத்தியது. வியாபாரப் பொருட்களுக் கான ஏற்றுமதி இறக்குமதி. பயணிகள் போக்குவரத்தையும் அக்கம்பெனி கேள்வி கேட்க ஆளில்லாமல் அதிக கட்டணக் கொள்ளையையும் நடத்தியது.
ஆங்கிலேயரின் ஆதிக்கத்தை அடக்கவும் கட்டணக் கொள்ளையை ஒடுக்கவும் மனதில் உறுதி கொண்ட வ.உ.சி 1906 அக்டோபர் 6ல் சுதேசிக் கப்பலை நடத்துவதற்குப் பதிவு செய்தார். மக்களிடமே சுதேசிக் கப்பலை நடத்திட பங்குத் தொகை மூலம் நிதி திரட்டிட கருதினார். ரூபாய் 25 வீதம் 40 ஆயிரம் பங்குகளை மக்களுக்காக ஒதுக்கினார். பாலவநத்தம் ஐமீன் பாண்டித்துரைத் தேவர். தென்னாப்பிரிக்கத் தமிழர் எஸ்.வேதமூர்த்தி. வடநாட்டு வணிகர்கள். தென்னாட்டு மக்கள் உதவினர். ரூ.10 இலட்சம் முதலீட்டில் எஸ்.எஸ்.காலிபா சுதேசி ஸ்டீம் கம்பெனி நிறுவப்பட்டது. காலிபா. லாவோ என்ற பெயரில் சுதேசிக் கப்பல்கள் கடல் வணிகத்தையும் மக்கள் போக்கு வரத்தையும் மேற்கொண்டது. மக்களின் ஆதரவு மலைபோல குவிந்தது. ஆங்கிலேயரின் தான் தோன்றித் தனத்திற்கு சாவு மணி அடித்தார். வ.உ.சி.
கொந்தளித்த ஆங்கிலேயர் எப்படியாவது வ.உ.சி யையும். சுதேசி கப்பல்களையும் ஒடுக்குவதென தீர்மானித்து பல சதித் திட்டங்களைப் போட்டனர். ஆங்கிலேய அதிகாரிகள் காட்டிக் கொடுக்கும் கைக்கூலிகளை கையிலெடுத்துக் கொண்டனர்.
1908 பிப்ரவரி 3 இல் தூத்துக்குடிக்கு வந்த சுப்பிரமணிய சிவா.வ.உ.சியின் தோளோடு தோள் நின்று பணியாற்றினார். சில நிமிடம் பேசினால் மக்களின் சுதந்திர உணர்வை நாட்டுப்பற்றைத் தூண்டக் கூடிய அற்புதப் பேச்சாற்றல் வ.உ.சிக்கு இருந்தது.
வ.உ.சியின் சொற்பொழிவு பல்லாயிரம் மக்களை கட்டிப்போடும் காந்த சக்தி கொண்டதாக இருந்தது. சுப்பிரமணிய சிவாவின் தீப்பொறி பறக்கும் பேச்சு கோழை களையும் வீரனாக்கும் சக்தியுடையதாக ஒளிர்ந்தது.
சாதாரண உழைக்கும் மக்களின் உள்ளங்களைத் தொட்டு. சுதந்திரப் போராட்ட உணர்வுகளைத் தட்டி எழுப்பிய வ.உ.சியின் தமிழருவிப் பேச்சு மீதும், சுதேசிக் கப்பல் மீதும் கோபத்திலிருந்த தூத்துக்குடி சப்கலெக்டர் பிரேக்கன். ஒரு தடை உத்தரவைப் பிறப்பித்தார். வ.உ.சியும் சுப்பிரமணிய சிவாவும் தூத்துக்குடியில் எந்தக் கூட்டத்திலும் பேசக்கூடாது.
இவ்வாறு கூட்டத்தில் பேசத் தடை விதித்தாலும் மக்களை ஆங்காங்கே வீதிகளில் சந்தித்து கருத்துகளைப் பதிவு செய்து வந்தார். சுதேசி இயக்கத்தின் மற்றொரு செயல் வடிவமாக நெசவுத் தொழிலாளர்களின் நலனுக்காக தருமச் சங்கத்தையும், கூட்டுறவு மேம்பட சுதேசி கூட்டுறவுப் பண்டக சாலையையும் தொடங்கினார். கோரல் மில்லில் வேலை செய்யும் தொழிலாளர்களின் ஊதிய உயர்வு வேலை நேரத்தைக் குறைத்தல். ஞாயிற்றுக்கிழமையை விடுமுறை யாக்குதல் ஆகியவற்றிற்காக முதல் உரிமைக் குரலை எழுப்பினார்வ.உ.சி.
உழைக்கும் தொழிலாளர்களோடு தலைமை தாங்கிப் போராடி வெற்றிதேடித் தந்தார். இந்த எழுச்சியான போராட்டத்திற்கு சுப்பிரமணிய சிவாவும் பத்மநாப ஐயரும் உடனிருந்தார்.
மக்கள் சக்தியை மாபெரும் சக்தியாக ஒருங்கிணைத்த வ.உ.சி.யைக் கண்டு ஆங்கிலேயருக்கு அச்சமும், பதட்டமும் ஏற்பட்டது.
நெல்லை மாவட்டக் கலெக்டர் விஞ்ச் துரையும் சப்கலெக்டரும் மாஜிஸ்ட்டிரேடிடம் வ. உ. சியை ஏதாவது ஒரு காரணம் கூறி ஜெயிலில் தள்ள துடித்தனர். வங்காளத்தில் விடுதலைப் போராட்டத்திற்கு தலைமைதாங்கி நடத்திய விபின் சந்திரபால் ஆங்கிலேயரின் வழக்குகளிலிருந்து 1908 மார்ச் 9 இல் விடுதலை அடைந்தார்.
அந்த நாளை சுயராஜ்ய தினமாகக் கொண்டாட முடிவெடுத்தார் வ.உ.சி. அந்த விழாவை நடத்தக் கூடாது எனக் கலெக்டர் தடை விதித்தார். தடையை மீறி விழாவை நடத்திய வ.உ.சி.யையும் சுப்பிரமணிய சிவாவையும் 1908 மார்ச் 12 இல் கைது செய்தனர். திருநெல்வேலி மாவட்டக் கலெக்டர் விஞ்த்துரை சப்கலெக்டர் ஆஷ்துரை ஆகியோரின் கூட்டு சதி இதன் மூலம் வெற்றி பெற்றது.
அரசுக்கு எதிராக சதி செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் நண்பர்கள் இருவரும் அடைக்கப்பட்டனர்.
ஆங்கிலேயரின் எண்ணப்படி சுதேசிக் கப்பல் கம்பெனி திணறியது. கப்பல் கம்பெனியை நடத்த, தன்னுடைய வக்கீல் தொழிலை விட்டு விட்டு எஸ்.டி.கிருஷ்ணய்யங்கார் முன் வந்தார். அவரது முயற்சி பயனளிக்காமல் தோல்வியடைந்தது.
வ.உ.சியும் சுப்பிரமணிய சிவாவும் சிறையில் அடைக்கப்பட்டாலும் அவர்களது எண்ணங்கள் இளைஞர்களிடம் வேரூன்றின. அவர்கள் வீசிய விடுதலை விதைகள், முளை விட ஆரம்பித்தன.


