மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் தங்குதடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு அலுவலர்களுக்கு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் அறிவுறுத்தினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் ‘உரிமைகள்’ திட்டத்தின் செயல்பாடுகள் குறித்த துறை சார்ந்த அலுவலர்களுடனான ஆய்வுக் கூட்டம், மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்டத்தில் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான கணக்கெடுப்புப் பணிகள், அவர்களுக்கு வழங்கப்பட்டு வரும் அரசு நலத்திட்ட உதவிகள் மற்றும் திட்டங்களின் தற்போதைய செயல்பாடுகள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் இயங்கி வரும் 15 ஒருங்கிணைந்த சேவை மையங்களின் செயல்பாடுகள், சமுதாய வல்லுநர்கள், சமுதாய மறுவாழ்வுப் பணியாளர்கள் மற்றும் வட்டார ஒருங்கிணைந்த மையங்களில் பணியாற்றும் பணியாளர்களின் களப்பணிகள் குறித்தும் மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் நேரில் கேட்டறிந்து ஆய்வு மேற்கொண்டார்.
மாற்றுத்திறனாளிகளுக்கு அரசின் நலத்திட்டங்கள் தங்குதடையின்றிச் சென்றடைவதை உறுதி செய்யுமாறு அலுவலர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இந்நிகழ்வில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் காமாட்சி மற்றும் அரசுத்துறை சார்ந்த பல்வேறு அலுவலர்கள் திரளாகக் கலந்துகொண்டனர்.


