தூத்துக்குடி மாவட்டக் கலைமன்றம் வாயிலாக 2025-2026ஆம் ஆண்டிற்கான கலை விருதுகள் பெற தகுதி வாய்ந்த கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டின் கலைப்புலமைகளை மேம்படுத்தவும், பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலைத் திறனை சிறப்பிக்கும் வகையிலும் கலை பண்பாட்டுத்துறையின் கீழ் மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் செயல்படும் மாவட்டக் கலை மன்றங்களின் வாயிலாக ஒவ்வொரு மாவட்டத்திலும் 2002-2003ஆம் ஆண்டு முதல் ஆண்டுதோறும் வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் சிறந்த பதினைந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்கிட அரசு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அறிவுறுத்தலின்படி 2002-2003ஆம் ஆண்டு முதல் தூத்துக்குடி மாவட்டத்தில் 2023-2024ஆம் ஆண்டு வரையில் 135 கலைஞர்களுக்கு கலை விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளன.
கலை விருதுகள், கலை பண்பாட்டுத்துறையின் கீழ் இயங்கி வரும் தூத்துக்குடி மாவட்டக் கலை மன்றத்தின் வாயிலாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இயல், இசை, நாடகம் முதலிய கலைகளில் ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட கலைகளில் சிறந்து விளங்கும் பதினைந்து கலைஞர்களுக்கு விருதுகள் வழங்க மாவட்ட ஆட்சியர் அவர்கள் தலைமையில் தேர்வாளர் குழு அமைக்கப்பட்டு இத்தேர்வுக்குழு வாயிலாக விருதுக்கு விண்ணப்பிக்கும் கலைஞர்களை நேர்முகமாக அழைக்கப்பட்டு கலைவல்லுநர்களை கொண்டு கலைஞர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆகவே, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த பாட்டு, பரத நாட்டியம், கும்மி, கோலாட்டம், மயிலாட்டம், தேவராட்டம், தோல்பாவைக்கூத்து, பொம்மலாட்டம், நையாண்டிமேளம், கரகாட்டம், காவடி, பொய்க்கால் குதிரையாட்டம். மரக்கால் ஆட்டம். கோல்கால் ஆட்டம், கழியல் ஆட்டம். கணியான் கூத்து, ஓவியம், சிற்பம், அரசன் அரசியாட்டம், புலியாட்டம், காளையாட்டம், மானாட்டம், பாம்பாட்டம், ஆழியாட்டம், கைச்சிலம்பாட்டம், சிலம்பாட்டம் (வீரக்கலை) மற்றும் வில்லிசை முதலிய செவ்வியல் கலைகள், நாட்டுப்புறக் கலைகள் என அனைத்து வகை முத்தமிழ் கலைகளில் சிறந்து விளங்கும் கலைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
18 வயதும் அதற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை இளமணி விருதும், 19 முதல் 35 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை வளர்மணி விருதும், 36 முதல் 50 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலைச் சுடர்மணி விருதும், 51 முதல் 65 வயதிற்குட்பட்ட கலைஞர்களுக்கு கலை நன்மணி விருதும், 66 வயதிற்கு மேற்பட்ட கலைஞர்களுக்கு கலை முதுமணி விருதும் வழங்கப்படவுள்ளன.
வயது மற்றும் கலைப்புலமையின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும் பதினைந்து சிறந்த கலைஞர்களுக்கு பட்டயம், பொன்னாடை மற்றும் பொற்கிழி ஈடாக கலை இளமணி விருதுக்கு ரூ.4000/- ம், கலை வளர்மணி விருதுக்கு ரூ.6000/-ம், கலை சுடர்மணி விருதுக்கு ரூ.10000/-ம், கலை நன்மணி விருதுக்கு ரூ. 15000/-ம், கலை முதுமணி விருதுக்கு ரூ.20000/- தொகைக்கான காசோலை வழங்கி கௌரவிக்கப்படும்.
மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய விருதுகள், மாநில விருதுகள் (கலைமாமணி) மற்றும் ஏற்கனவே மாவட்டக் கலை மன்றத்தின் விருதுகளைப் பெற்ற கலைஞர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பம் செய்யக்கூடாது.மேலும், கடந்த ஆண்டுகளில் ஏற்கனவே விருதுக்கு விண்ணப்பம் செய்த கலைஞர்கள் தற்போதும் புதியதாக விண்ணப்பம் அனுப்பவேண்டும்.
இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த தகுதி வாய்ந்த கலைஞர்கள் விருதுகள் பெறுவதற்கான விண்ணப்பத்தினை கலை பண்பாட்டுத்துறையின் இணைய தளத்தில் (https://artandculture.tn.gov.in) பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து அனுப்பலாம் அல்லது தாங்களாகவே விருது வேண்டி கடிதம் எழுதி அதனுடன் வயதுச் சான்று, முகவரிச்சான்று மற்றும் கலை அனுபவச் சான்றுகளை இணைத்து (தொலைபேசி எண்ணுடன்) உதவி இயக்குநர், மண்டல கலைப்பண்பாட்டு மையம், 870/21, அரசு அலுவலர் ஆ குடியிருப்பு (தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகம் அருகில்), திருநெல்வேலி, தொலைபேசி எண் 0462 2901890 என்ற முகவரிக்கு 20.08.2026க்குள் விண்ணப்பிக்குமாறு மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன், தெரிவித்துள்ளார்.


