தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகள் முழுவதும் ஆக.9ஆம் தேதி முதல் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும் என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
தூத்துக்குடி மாநகராட்சிப் பகுதிகளுக்குக் குடிநீர் விநியோகம் செய்யப்படும் வல்லநாடு தலைமை நீரேற்று நிலையம் அருகில் நடைபெற்று வரும் குடிநீர் குழாய் சீரமைப்புப் பணிகளை மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் போது மேயர் ஜெகன் பெரியசாமி செய்தியாளர்களிடம் தெரிவிக்கையில்: “வல்லநாடு பகுதியில் குடிநீர் குழாய் சீரமைப்புப் பணிகள் மிகவும் விரைவாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகள் முழுமையாக நிறைவடையும் வரை தூத்துக்குடி மாநகரப் பகுதி மக்கள் குடிநீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன்.
சீரமைப்புப் பணிகள் முடிந்து வரும் 09.08.2026 (ஞாயிற்றுக்கிழமை) முதல் மாநகராட்சிப் பகுதிகள் முழுமைக்கும் மீண்டும் சீரான முறையில் குடிநீர் விநியோகம் செய்யப்படும்.” என்று மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
ஆய்வின் போது தி.மு.க. செயற்குழு உறுப்பினர் சி.எஸ். ராஜா, முன்னாள் மாமன்ற உறுப்பினர் ரவீந்திரன், மாமன்ற உறுப்பினர்கள் சுரேஷ் குமார், கனகராஜ், முத்துவேல், மண்டலத் தலைவர் நிர்மல்ராஜ் மற்றும் மாநகராட்சி அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.


