தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் சுயேச்சையாக போட்டியிட, நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தைச் சேர்ந்த ஜவுளி வியாபாரி குணசேகரன் என்ற 64 வயது முதியவர் தனது வேட்பு மனுவை தேர்தல் நடத்தும் அலுவலர் சார் ஆட்சியர் ஹிமான்சு மங்கலிடம் தாக்கல் செய்தார்.
வயது முதிர்வு காரணமாக ஆட்டோ மூலமாக சார் ஆட்சியர் அலுவலகத்திற்கு வாக்கர் உதவியுடன் நடந்து வந்து மனு தாக்கல் செய்தார். குமாரபாளையத்தில் இருந்து கோவில்பட்டிக்கு ஏன் வேட்பு மனு தாக்கல் செய்தீர்கள் என்று செய்தியாளர்கள் கேட்டபோது, பட்சி சொன்னதால் நான் கோவில்பட்டியில் போட்டியிடுகிறேன். நிச்சயம் 30 ஆயிரம் வாக்குகளாவது பெறுவேன்.
நான் ஜவுளி வியாபாரம் செய்து வந்தேன். மேலும், சங்க நிர்வாகியாகவும் இருந்தேன். பிரதமர் மோடி ஆட்சிக்கு பின்னர், ஜிஎஸ்டி வரி விதிப்பு, கொரோனா போன்ற காரணங்களால் தொழில் நலிவடைந்துவிட்டது. இந்த சூழ்நிலையில் பட்சி கோவில்பட்டியில் போய் போட்டியிடு என்று சொன்னதால் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளேன். நிச்சயமாக தேர்தல் பிரச்சாரம் செய்வேன்.
வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கை உள்ளது. வெற்றி பெற்றால் செய்தியாளர்களுக்கு ஆடு வெட்டி கறிவிருந்து வைப்பேன். மான் கறி கொடுக்க முடியாது. மான்கறி விருந்து கொடுத்தால் வழக்கு ஆகிவிடும்.. அதனால் ஆட்டுக்கறி விருந்து வைப்பேன் என்றார்.


