தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் வரத்து குறைவால் விலை உயர்ந்திருந்தாலும், மீன் வாங்க பொதுமக்கள் கூட்டம் அலைமோதியது.
தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரையில் இன்று மீன்களின் வரத்து குறைந்ததன் காரணமாக, மீன்களின் விலை கணிசமாக உயர்ந்து காணப்பட்டது. நிலவு வெளிச்சம் அதிகமாக இருந்ததால் கடலுக்குச் சென்ற மீனவர்களின் வலையில் குறைவான அளவே மீன்கள் சிக்கியதே இந்த விலை உயர்விற்குக் காரணமாகக் கூறப்படுகிறது.
தற்போது கடலில் நிலா வெளிச்சம் அதிகம் காணப்படும் ‘நிலவு வாரம்’ என்பதால், மீன்கள் ஆழ்கடல் பகுதிக்குச் சென்றுவிட்டன. இதனால் இன்று கரை திரும்பிய நாட்டுப்படகு மீனவர்களின் வலையில் சீலா, பாறை, வெலமீன், ஊளி, நெத்திலி மற்றும் இறால் போன்ற மீன்கள் மிகக் குறைந்த அளவிலேயே கிடைத்தன. குறிப்பாக, தூத்துக்குடி மக்கள் விரும்பி உண்ணும் ‘சாலை மீன்’ இன்று சந்தைக்கு வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மீன்கள் வரத்து குறைந்த போதிலும், இன்று சனிக்கிழமை விடுமுறை தினம் என்பதால் திரேஸ்புரம் கடற்கரையில் மீன் வாங்குவதற்காக ஏராளமான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் குவிந்தனர். தேவையை விட வரத்து குறைவாக இருந்ததால், ஏலக்கூடத்தில் மீன்களை வாங்குவதற்கு வியாபாரிகளிடையே கடும் போட்டி நிலவியது.
சந்தையில் நிலவிய கடும் போட்டி காரணமாக மீன்களின் விலை வழக்கத்தை விட அதிகமாக இருந்தது. சீலா மீன் கிலோ ரூ.1000 முதல் ரூ.1100 வரை, பாறை மீன் கிலோ ரூ.500 முதல் ரூ.600 வரை, வெல மீன் கிலோ ரூ.600 முதல் ரூ.700 வரை, ஊளி மீன் கிலோ ரூ.600, சூரை மீன் கிலோ ரூ.350, பன்னாம் பாறை ஒரு வட்டா ரூ.5000 என்று விற்பனையானது. வரத்து குறைவால் விலை உயர்ந்திருந்தாலும், திரேஸ்புரம் கடற்கரையில் மீன் வாங்க பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினர். இதனால் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.


