தூத்துக்குடியில், அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வந்தே பாரத் ரயில் சேவை உள்ளிட்ட 6 அம்சங்கள் பாஜக தேர்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2026-ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் அறிக்கைகளைத் தயார் செய்யும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில், தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியின் மேம்பாட்டிற்காக பாரதிய ஜனதா கட்சியின் தேர்தல் அறிக்கையில் சேர்க்கப்பட வேண்டிய முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை அக்கட்சியின் தூத்துக்குடி மாவட்ட ஆன்மீகப் பிரிவு இணை அமைப்பாளர் எஸ். உஷா தேவி அளித்துள்ளார்.
அதில், தூத்துக்குடி மாநகரப் பகுதி மாணவர்களின் உயர்கல்வித் தரத்தை உயர்த்தும் வகையில், நகருக்குள்ளேயே புதிய அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி ஒன்றைத் தொடங்க வேண்டும். தூத்துக்குடி மற்றும் சென்னை இடையே வணிகர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக பகல் நேர “வந்தே பாரத்” ரயில் சேவையை அறிமுகப்படுத்த வேண்டும்.
மாணவர்களின் அறிவுத்திறனை மேம்படுத்தும் வகையில் நவீன வசதிகளுடன் கூடிய மத்திய அரசு பொது நூலகத்தை தூத்துக்குடியில் அமைக்க வேண்டும்.கிராமப்புற மாணவர்களுக்குத் தரமான கல்வி கிடைக்க, தூத்துக்குடி தொகுதியில் நவோதயா பள்ளிகளைத் தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
சுதந்திரப் போராட்ட வீரர் வ.உ. சிதம்பரனார் வாழ்ந்த இல்லத்தை அரசு நினைவு இல்லமாக மாற்றி, அங்கு அவரது வாழ்க்கை வரலாற்றை விளக்கும் ஒலி-ஒளி காட்சிக் கூடத்தை அமைக்க வேண்டும். தேசப்பற்று மிக்க மாவீரன் ஜெய்ஹிந்த் செண்பகராமன் நினைவைப் போற்றும் வகையில், தூத்துக்குடி ரயில் நிலையத்திற்கோ அல்லது ஒரு ரயிலுக்கோ அவரது பெயரைச் சூட்ட வேண்டும். இவ்வாறு அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார்.


