திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் கந்த சஷ்டித் திருவிழாவின் 2-ஆம் திருநாளை முன்னிட்டு, சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் சண்முகவிலாச மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் 2-ஆம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் கந்த சஷ்டி திருவிழா கோலாகலமாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது.
விழாவின் 2-ஆம் திருநாளை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கே கோவில் நடை திறக்கப்பட்டு விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் மற்றும் உச்சிக்கால தீபாராதனை ஆகியவை நடைபெற்றன. தொடர்ந்து யாகசாலையில் உள்ள சுவாமி ஜெயநாதருக்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன.
மதிய வேளையில், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி சண்முகவிலாச மண்டபத்தை வந்தடைந்தார். அங்கு சுவாமிக்குச் சிறப்பு தீபாராதனை நடைபெற்றது. அப்போது திரண்டிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் “அரோகரா” கோஷமிட்டுச் சாமி தரிசனம் செய்தனர்.
மாலை வேளையில் சுவாமி ஜெயந்திநாதர், திருவாவடுதுறை ஆதீன கந்த சஷ்டி மண்டபத்தில் எழுந்தருளி அபிஷேக அலங்காரம் கண்டருளினார். இரவில் வள்ளி-தெய்வானை அம்பாள்களுடன் தங்க ரதத்தில் எழுந்தருளி கிரிப்பிரகாரத்தில் வீதி உலா சென்று பக்தர்களுக்குக் காட்சியளித்தார்.
திருவிழாவின் முக்கிய நிகழ்வான சூரசம்ஹாரம், 6-ஆம் திருநாளான வரும் நவம்பர் 15-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணி அளவில் திருச்செந்தூர் கடற்கரையில் நடைபெறவுள்ளது.
விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் கோவில் அறங்காவலர் குழுத் தலைவர் அருள் முருகன், இணை ஆணையர் அருணாசலம், அறங்காவலர்கள் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.


