தூத்துக்குடி – மும்பை இடையே நேரடி விமான சேவை தொடங்க வேண்டும் என்று நவி மும்பை விமான நிலைய அதிகாரியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
தென்தமிழகத்தின் முக்கிய தொழில் நகரமான தூத்துக்குடியையும், நாட்டின் நிதித் தலைநகரான மும்பையையும் இணைக்கும் வகையில் நேரடி விமான சேவையைத் தொடங்க வலியுறுத்தி, மும்பை விழித்தெழு இயக்கம் சார்பில் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தின் முனைய மேலாளரிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.
மத்திய அரசின் சீரிய முயற்சியால் தூத்துக்குடி விமான நிலையம் தற்போது சர்வதேச தரத்திற்கு தரம் உயர்த்தப்பட்டுள்ளது. 3,115 மீட்டர் நீளமுள்ள புதிய ஓடுதளம் (Runway) மற்றும் அதிநவீன பயணிகள் முனையம் ஆகியவை செயல்பாட்டிற்கு வந்துள்ள சூழலில், பெரிய ரக ஏர்பஸ் மற்றும் போயிங் விமானங்கள் வந்து செல்ல ஏதுவாக வசதிகள் உள்ளன.
“தூத்துக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள மாவட்டங்களைச் சேர்ந்த லட்சக்கணக்கான மக்கள் மும்பையில் வசித்து வருகின்றனர். அவர்களின் நீண்ட காலக் கோரிக்கையான நேரடி விமான சேவையைத் தொடங்கினால், பயண நேரம் குறையும் என்பதோடு வர்த்தக ரீதியாகவும் இரு நகரங்களும் பெரும் பலன் பெறும். குறிப்பாக நவி மும்பை விமான நிலையம் செயல்பாட்டிற்கு வரும்போது, தூத்துக்குடிக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்,” என ஸ்ரீதர் தமிழன் தனது மனுவில் வலியுறுத்தியுள்ளார்.


