ஊரக பகுதிகளில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களுக்கு இலவசமாக 5 வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டத்தில் பயன்பெற வரும் டிசம்பர் 9ம் தேதிக்குள் விண்ணப்பிக்குமாறு தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ’’ஊரக பகுதிகளில் வசிக்கும் ஏழ்மைநிலையில் உள்ள விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட ஆதரவற்ற பெண்களை தொழில் முனைவோராக உருவாக்கிட தமிழக அரசால் பெண் பயனாளிகளுக்கு இலவசமாக 5 வெள்ளாடுகள், செம்மறியாடுகள் வழங்கும் திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் செயல்படுத்த உள்ளது.
ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திற்கு 100 பெண் பயனாளிகள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதில் 30 எஸ்சி, எஸ்டி பயனாளிகள் தேர்வு செய்யப்படுவர். இத்திட்டத்தில் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் மட்டுமே பயனாளிகளாக தேர்ந்ததெடுக்கப்படுவர்மேலும் அரசின் முந்தைய இலவச வெள்ளாடுகள், கறவைப்பசுக்கள் திட்டத்தில் பயன்பெறாத, 60 வயதுக்குட்பட்ட, உள்ளுரில் நிரந்தரமாக குடியிருக்கும் விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் மற்றும் ஆதரவற்ற பெண்கள் மட்டுமே இத்திட்டத்தின்கீழ் பயனாளிகளாக தேர்ந்தெடுக்கப்பட தகுதியுள்ளவர்கள் ஆவார்.
மேற்கண்ட தகுதிகள் உள்ள பெண்கள் உரிய விண்ணப்பங்களை அந்தந்த பகுதி கால்நடை மருந்தகங்களில் பெற்று விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து உரிய கிராம அலுவலரிடம் ஒப்புதல் பெற்று அந்தந்த கால்நடை மருந்தகங்கள், கால்நடை உதவி மருத்துவரிடம் பூர்த்தி செய்த விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை வரும் டிசம்பர் 9ம் தேதி(வியாழகிழமை) மாலை 5.00 மணிக்குள் அளித்திட வேண்டும்’’ என்று தெரிவித்துள்ளார்


