தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி கலையரங்கத்தில் “இன்றைய சமூகச் சூழலில் பெண்களின் பாதுகாப்பு” குறித்த கருத்தரங்கடில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: பெண்கள் எல்லாவற்றையும் உணர்வு பூர்வமாக அணுக கூடியவர்கள். குழந்தை வளர்ப்பு முதல் குடும்ப பராமரிப்பு வரை பணிபுரிந்து கொண்டே சமாளிக்கும் பெண்களை தலைவணங்குகிறேன். ஆண், பெண் என்ற இரு பிரிவினர்களில் பெண் படைப்பு மிகவும் உன்னதமானது. என்னால் முடியும் என்ற எண்ணத்துடன் பெண்கள் முன்னேற்றத்தை நோக்கி செல்ல வேண்டும். ஒரு கோட்டை அழிக்காமல் அருகில் பெரிய கோடு வரைவதன் மூலம் சிறிய கோடாக மாற்றுவது போல தீமை என்ற சிறிய கோட்டை நன்மை என்ற பெரிய செயல்களால் பெண்கள் வெல்ல வேண்டும்.
“சோஷியல் மீடியா” பயன்பாடு அளவோடு இருப்பதுடன் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தினால் பெண்கள் ஜெயிப்பதற்கு அது வழிவகுக்கும். முகம் தெரியாத நபருடன் பழக்க வழக்கங்கள் தேவையற்றது. பெண்கள் மாயை உலகில் வீழ்ந்து விடக்கூடாது. தவறாக படம்பிடித்து மிரட்டுவோரை தண்டிக்க தகவல் தொழில்நுட்ப சட்டம் எண்.66(E) மூலம் எளிதில் தண்டனை பெற்று தர முடியும். பெண்களுக்கு தோல்வியை தாங்கும் பக்குவம் வேண்டும். தற்கொலை எண்ணம் அறவே கூடாது. “சாரி” மற்றும் “நன்றி” சொல்வது இன்றியமையாதது.
இலக்கு இல்லாத விளையாட்டுகள் கூட எங்கும் காண இயலாது. எனவே பெண்கள் கண்ணியத்துடன் எல்லைகளுடன் ஏமாறாமல் பழகுதல் நன்று. உங்களது பிரச்சனைகளை தீர்க்க காவல்துறையினரை அணுக தயங்கக் கூடாது என காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன், உரையாற்றினார். இந்நிகழ்ச்சியினை வ.உசிதம்பரம் கல்லூரியின் பெண்கள் ஆலோசனைக் குழுமம் முன்னின்று நடத்தினர். முதல்வர் சொ.வீரபாகு, வரவேற்புரையாற்றினார். ஆங்கிலத்துறை பேராசிரியை செல்வி கோகிலா நன்றியுரை வழங்கினார்.


