பெருங்குளம் திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் குருமுதல்வர் ஶ்ரீ சத்தியஞான தரிசினிகள் குருபூஜை விழா நடைபெற்றது.
கொற்கை பாண்டிய மன்னர்களுக்கு முடிசூடி செங்கோல் வழங்கும் மாண்பை உடையது திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் ஆகும். சுமார் 1500 பழமையான இவ்வாதீன குருமுதல்வர் குருபூஜை பெருங்குளத்தில் உள்ள தலைமை மடத்தில் நடைபெற்றது. காலையில் நீடாமங்கலம் சுவாமிநாதன் குழுவினரின் மங்கள இசையுடன் நிகழ்ச்சி துவங்கியது. தொடர்ந்து சங்கை சுப்ரமணியன் ஓதுவாமூர்த்திகளின் திருமுறை விண்ணப்பமும், பெருங்குளம் சித்தர் தபோவனம் குருமூர்த்த திருக்கோவில்களில் ஆதீனகர்த்தர் வழிபாடும் நடைபெற்றது.
காலை 08:00 மணிக்கு ஆதீன ஆன்மார்த்த மூர்த்தி அழகிய திருச்சிற்றம்பலமுடையார் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. காலை 08:30 மணிக்கு திருக்கயிலாய பரம்பரை செங்கோல் ஆதீனம் 103ஆவது குருமகா சன்னிதானம் ஶ்ரீலஶ்ரீ சிவப்பிரகாச தேசிக சத்தியஞான பரமாச்சார்ய சுவாமிகள் அவர்கள் ஆதீன குருமுதல்வர் சத்தியஞான தரிசினிகள் மஹா அபிஷேகம் மற்றும் சிறப்பு வழிபாடு நடத்தினார்கள். மதியம் 12:30 மணிக்கு மாகேஸ்வர பூஜை நடைபெற்றது. குருபூஜை விழாவை முன்னிட்டு ஆதீனகர்த்தர் சிவகாசி வைரமுத்து, சிவகாசி பழநிவேல் குடும்பத்தினர் சார்பாக செங்கால் செய்து அர்ப்பணித்தார்கள்.
இலஞ்சி சங்கரசுப்ரமணிய பட்டர் ஆன்மீக பணிகளை பாராட்டி பொற்கிழி, சிவாகம கலாநிதி என்ற விருதும், கும்பகோணம் அன்னை கருணை இல்லம் அம்பலவாணன் சமுதாய பணிகளை பாராட்டி பொற்கிழி, சமூகசேவை செம்மணி விருதும், சங்கரன்கோவில் சங்கரநாராயணர் கோவில் ஓதுவாமூர்த்தி காளியப்ப ஓதுவார் ஆன்மீக பணிகளை பாராட்டி பொற்கிழியும், திருமுறை இசை வாரிதி என்ற பட்டமும், தூத்துக்குடி சைவநெறி இதழின் ஆசிரியர் சூ.பி.காந்தி பத்திரிக்கை மற்றும் சமுதாய பணிகளை பாராட்டி பொற்கிழி, இதழியல் நெறியாளர் என்ற விருதும், சென்னை ஜெயசங்கர் ஆன்மீக பணிகளை பாராட்டி பொற்கிழி, ஆன்மீக செல்வர் என்ற விருதும் சுயதொழில் முனையும் மகளிருக்கு தையல் இயந்திரமும், மாணவர்களுக்கு உதவி தொகையும் வழங்கினார்கள்.
மாலை 06:00 மணியளவில் ஆதீனகர்த்தர் பெருங்குளம் திருவழுதீஸ்வரர் சமேத ஶ்ரீ கோமதி அம்பாள் திருக்கோவிலில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. மாலை 07:00 மணியளவில் ஆதீனகுருமுதல்வரை சீவிகாரோகணம் செய்வித்து பெருங்குளம் வீதிகளில் பட்டிணபிரவேசம் நடைபெற்றது.இரவு 08:30 மணிக்கு குருமகா சன்னிதானம் சிவஞான கொலுக்காட்சியுடன் குருபூஜை விழா நிறைவு பெற்றது. இந்நிகழ்வில் தருமபுரம் ஆதீனம் திருச்சி மெளனமட கட்டளை விசாரணை மீனாட்சிசுந்தர தம்பிரான் மற்றும் திண்டுக்கல் சிவபுரம் ஆதீனம் திருநாவுக்கரசு தேசிக பரமாச்சார்ய சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை காறுபாறு அழகிய திருச்சிற்றம்பலமுடைய தம்பிரான் செய்திருந்தார்.


