5. குலசேகரபட்டனம் லோன் துரை கொலை சம்பவத்தில் நடந்த விடுதலை போராட்டம்.
1966ல் குலசேகரப் பட்டினம், மணப்பாடு உட்பட இந்த நகரத்தின் மக்கள் தொகை 10,679 ஆகும். இது சிறு துறைமுகமாகச் சிறந்து விளங்கி நெடுங்காலம் புகழ்பெற்ற சிறு நகரம். மரக்கலங்கள் பாய்விரித்துப் பெருமிதத்துடன் செங்கடலிலிருந்து ஜப்பான் வரை சென்று சிறப்புடைய துறைமுகமாக இருந்துள்ளது. திருச்செந்தூரிலிருந்து 14 கி.மீ. தொலைவில் இந்த நகரம் அமைந்துள்ளது. 1905 முதல் 1930 முடிய பாரி கம்பெனியாரின் சர்க்கரை ஆலை நடைபெற்று வந்தது. சோமலே குலசேகரபட்டினம் சென்ற போது வெல்லம் காய்ச்சும் தொழில் பெரிய அளவில் நடந்துள்ளது.
1942&ம் ஆண்டு குலசேகரன்பட்டினத்தில் ஆங்கிலேயருக்கு எதிராக நடந்த உப்பள சுதந்திரப் போர் ஒன்று நடந்துள்ளது. ஆனால், அது குறித்து இப்போது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
அடக்குமுறையில் ஈடுபட்டு உள்ளூர் மக்களை அடிமையாக்கி உப்பளத்தில் வேலை வாங்கிய வில்பிரட் லோன் துரை என்ற ஆங்கில அதிகாரி போரிட்டு படுகொலை செய்து வீரத்தை நிரூபித்த இடம் குலசேகரப்பட்டினம். சுதந்திர போராட்டம் சூடுபிடித்த 1942ம் ஆண்டு காலத்தில் நடந்த நிகழ்வு அது. அந்தக் காலத்தில் குலசேகரன்பட்டினத்தில் உப்பளத் தொழில் சிறப்பாக நடந்தது. ஆனால், அங்கு உற்பத்தி செய்யப்பட்ட உப்புகள் அனைத்தும் இந்திய மக்களின் பயன்பாட்டுக்கு முழுவதும் பயன்படவில்லை. ஆங்கிலேயர்கள் தங்கள் நாட்டுக்குக் கொண்டு சென்றனர்.
ஸ்காட்லாந்து நாட்டை சேர்ந்த வில்பிரட் லோன்துரை என்பவர் மேற்பார்வையில், அந்த உப்பளம் செயல்பட்டு வந்தது. அவர் தங்குவதற்கு தனியாக அங்கு ஒரு பங்களாவும் இருந்தது. அந்த பங்களாவைத் துப்பாக்கி ஏந்திய ஆங்கிலேயர்கள் பாதுகாத்து வந்தனர். குலசேகரன் பட்டினத்தைச் சுற்றி உள்ள கிராம மக்களில் பலர் அங்கு அடிமையாக இருந்து உப்பு தொழிலில் ஈடுபட்டு வந்தனர்.
நாட்கள் செல்லச் செல்ல ஆங்கில அதிகாரியின் அடக்குமுறை அதிகாரமானது. குலசேகரன்பட்டினம் உப்பு தொழிலாளர்களைக் கொடுமைப் படுத்தினர். அப்போதுதான் நாடு முழுவதும் சுதந்திரப் போராட்டத் தீ கொளுந்து விட்டு எரியத் தொடங்கியது. உப்பளத் தொழிலாளர்களும் வெகுண்டு எழுந்தனர். அவர்களின் கோபப் பார்வை அதிகாரி லோன்துரை மீது திரும்பியது.
வேல்கம்பு, அரிவாள், ஈட்டி, பெட்ரோல் போன்ற ஆயுதங்களுடன் திரண்டு வந்தனர். அதிகாலை 3 மணி அளவில் லோன்துரை தூங்கி கொண்டிருந்தார். இதுதான் சந்தர்ப்பம் என்று நினைத்து தாக்குதல் நடத்தினர். 4 மணி நேரம் நடந்த போரின் முடிவில் லோன் துரை கொல்லப்பட்டார். “ஓ கடவுளே” என்று கூறி இறந்தார். இந்த தகவல் அறிந்த ஆங்கிலேய படைகள் குலசேகரன் பட்டினத்திற்கு வரவழைக்கப்பட்டன. சாலையில் வந்து சென்றவர்கள் மீது அவர்கள் கொடூரத் தாக்குதல் நடத்தினர். வீடுகளில் புகுந்து சோதனை நடத்தினார்கள். வீட்டில் சிறு கத்தி இருந்தாலும் நடவடிக்கை எடுத்தார்கள். எச்சரிக்கை செய்தார்கள். லோன்துரை உடலைப் பிரேத பரிசோதனை செய்துவிட்டு, அவரது உடலில் 16 காயங்கள் இருந்ததாக தெரிவித்தார்கள்.
பின்னர் உடலை குலசேகரப்பட்டினம் ஊருக்கு வடக்கே உள்ள ஒரு கிறிஸ்தவ கல்லறைத் தோட்டத்தில் அடக்கம் செய்தனர். அவரது கொலை வழக்கில் 26 பேர் சேர்க்கப்பட்டனர். அனைவரும் திருச்செந்தூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்கள்தான். ஆங்கில படையினரிடம் பிடிப்பட்டவர்கள் பல இன்னலுக்கு ஆளானார்கள்.
லோன்துரை அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் கல்லறை அமைக்கப்பட்டது. இன்றும் அந்தக் கல்லறை எந்த சேதமும் இல்லாமல் உறுதியாக உள்ளது. குலசேகரன்பட்டினம் சென்றால் அந்த கல்லறையையும் அதில் குறிப்பிட்டு உள்ளவற்றையும் படிக்க முடியும்.
கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 26 தியாகிகளின் நினைவாக ஒரு மண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆங்கிலேயே கல்லறையைப்போல் பாதுகாப்பாக இல்லை. அதன் உட்புறப் பகுதி சேதமடைந்துள்ளது. அதில் இருந்த தியாகிகள் பற்றிய கல்வெட்டுகள் பெயர்ந்து கிடக்கிறது.
(தொடரும்)


