செம்பூரில் கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் தமிழகமெங்கும் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் உத்தரவுப்படி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வழிகாட்டுதலின்படி, ஸ்ரீவைகுண்டம் அருகே உள்ள ஆழ்வார்திருநகரி ஒன்றியம் அழகியமணவாளபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட செம்பூர் கிராமத்தில் இன்று கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம் நடந்தது.
கால்நடை பெருக்கம் மற்றும் தீவன அபிவிருத்தி துணை இயக்குனர் ராதாகிருஷ்ணன் மற்றும் திருச்செந்தூர் கோட்ட உதவி இயக்குனர் செல்வகுமார் ஆகியோர் முன்னிலையில் அழகியமணவாளபுரம் கிராம ஊராட்சி தலைவர் லீலா ஜெயக்குமார் தலைமை வகித்து முகாமை தொடங்கி வைத்தார்.
முகாமில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் ராஜன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாடு உரிமையாளர்களுக்கு பரிசு வழங்கினார். முகாமில் சிறந்த கால்நடை வளர்ப்பு விவசாயி விருது வழங்கப்பட்டது. பசுந்தீவன வளர்ப்பு, கால்நடை இனங்கள் உள்ளிட்டவை கண்காட்சியில் இடம் பெற்றது. ஆழ்வார்திருநகரி கால்நடை உதவி மருத்துவர் சுரேஷ் தலைமையில் பசுக்களுக்கு கருவூட்டல், சினைப் பரிசோதனை, குடற்புழு நீக்கம் போன்ற பணிகள் நடைபெற்றது.
முகாமில் கால்நடை ஆய்வாளர் பேச்சியம்மாள், உதவியாளர்கள் இராஜா, பஞ்சாயத்து செயலாளர் லட்சுமணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.


