ஸ்ரீ வைகுண்டம் தாலூகா வல்ல குளம் பஞ்சாயத்து அரசர் குளம் வேதக்கோயில் தெருவைச் சேர்ந்தவர் வழிகாத்த பெருமாள் நாடார் மகன் மகாலிங்கம்(62). அவர்கள். இவர் கடந்த 28.06.2018 அன்று பனையிலிருந்து விழுந்து இறந்து விட்டார். இவருக்கு 1லட்ச ரூபாய் நிதி உதவியை அரசு வழங்கியது. இதை வாங்கத் தூத்துக்குடி சப் கலெக்டர் அலுவலகத்திற்கு அவரது மனைவி செண்டு சென்ற போது சாலை விபத்தில் இறந்தால் மட்டும் தான் நிதி உதவி கிடைக்கும். உங்களுக்கு நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் மூலமாகத்தான் விபத்து உதவித் தொகை கிடைக்கும் என்று செண்டு பெயரில் எழுதிய செக்கைத் திருப்பி வாங்கி விட்டுத் திருப்பி அனுப்பி விட்டார்கள். நலிவுற்றோர் தாசில்தாரிடம் இது குறித்த மனு கொடுத்த போது அவர் 60 வயதுக்கு மேற்பட்டோர் பனையிலிருந்து விழுந்தால் அவர்களுக்கு நிவாரண நிதி கொடுக்க முடியாது எனக் கூறிவிட்டார்.
இதுகுறித்து ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்த்தராஜ் அவர்களிடமும், மாவட்ட ஆட்சித்தலைவரிடம் மனுகொடுக்கப்பட்டது.
சட்டமன்றத்தில் இது குறித்து ஊர்வசி அமிர்த்த ராஜ் சட்டமன்ற உறுப்பினர் பேசினார்.
தற்போது மாவட்ட ஆட்சித் தலைவரோ, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரோ, மாவட்ட நீதிபதிகளோ பரிந்துரை செய்தால் வயதைத் தளர்வு செய்து விட்டு மகாலிங்கம் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண நிதியைக் கொடுக்கலாம் என்றவொரு விதி முறை உள்ளது.
அதற்காக மாகலிங்கம் மனைவி செண்டு அம்மாள் மாவட்ட ஆட்சித் தலைவரிடமும் மனு கொடுத்தார். அந்த மனுவின் மீது மாவட்ட ஆட்சித்தலைவர் தனிக்கவனம் எடுத்து ஸ்ரீ வைகுண்டம் நலிந்தோர் நலத்திட்ட தாசில்தாருக்கு விசாரணைக்கு அனுப்பினார். நீண்ட நாள்களாக அந்த மனு ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நிலுவையில் உள்ளது. அந்த மனுவைப் பரிந்துரை செய்து ஸ்ரீ வைகுண்டம் நலிந்தோர் நலத்திட்ட தாசில்தார் பரிந்துரை கடிதத்தினை மாவட்ட ஆட்சித் தலைவருக்கு அனுப்பினால் மகாலிங்கம் குடும்பத்துக்கு நிதி உதவி கிடைக்கும். அதற்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர்.
இதற்கிடையில் அரசர் குளத்திற்கு வெள்ளச்சேதத்தினை பார்வையிட ஊர்வசி அமிர்த ராஜ் வந்தார். வெள்ளத்சேதம் நடந்த இடங்களை பார்வையிட்டார். அதன்பின் அவர் மகாலிங்கம் வீட்டுக்குச் சென்று செண்டு அம்மாளிடம் துக்கம் விசாரித்தார். அதன் பின் அவர் ஏழ்மையில் நிலையில் வாழ்வதைக் கண்டு அவருக்குத் தனது சொந்த பணத்திலிருந்து ரூ 5 ஆயிரத்தினை கொடுத்தார். மேலும் ஸ்ரீ வைகுண்டம் வட்டாட்சியர் ராதாகிருஷ்ணனிடம், பாதிக்கப்பட்ட குடும்பத்துக்கு நிவாரணம் கிடைக்க ஆவண செய்யும் படி கேட்டுக்கொண்டார். அவருடன் ஸ்ரீவைகுண்டம தாசில்தார் ராதாகிருஷ்ணன், செய்துங்கநல்லூர் வருவாய் ஆய்வாளர் மைதிலி, கால்வாய் பஞ்சாயத்துத் தலைவர் சேகர் என்ற சேது ராமலிங்கம், வல்ல குளம் பஞ்சாயத்துத் தலைவர் கமலம் குமார், அரசர் குளம் காங்கிரஸ் கிளை செயலாளர் பால் துரை, செல்லபாண்டி, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் சங்கர், எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு, வட்டார காங்கிரஸ் தலைவர் புங்கன் உள்படப் பலர் உடன் வந்தனர்.


