The Prime Minister, Shri Narendra Modi meeting the Chief Minister of Tamil Nadu, Ms. J. Jayalalithaa, in Chennai, Tamil Nadu on August 07, 2015.
ஜெ. ஜெயலலிதா முன்னாள் தமிழக முதல்வரும், அரசியல் தலைவரும், பிரபல முன்னாள் தென்னிந்தியத் திரைப்பட நடிகையும் ஆவார். இவர் தமிழக முதலமைச்சராக ஐந்து முறை பதவி வகித்துள்ளார். இவர் 1991 முதல் 1996 வரையும், 2001 ஆம் ஆண்டில் சில மாதங்களும், பின்னர் 2002 முதல் 2006 வரையும், 2011 முதல் 2014 வரையும் இருந்தார். 2015 மே 23 முதல் இறக்கும் வரையில் (5 திசம்பர் 2016) முதலமைச்சராகப் பணி புரிந்தார். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளராக இருந்த இவரை “புரட்சித் தலைவி” எனவும் “அம்மா” எனவும் இவரது ஆதரவாளர்கள் அழைத்தனர்.தனது தொட்டில் குழந்தை திட்டத்துக்காக ஐக்கிய நாடுகள் சபையில் (ஐ.நா சபை) மத்தியில் கைதட்டைப் பெற்ற இந்தியாவை சார்ந்த முதல் பெண் முதலமைச்சர் இவரே ஆவார். அரசியலுக்கு நுழைவதற்கு முன்னர் இவர் 120 க்கும் மேற்பட்ட தமிழ், தெலுங்கு, கன்னட மொழித் திரைப்படங்களில் முன்னணிப் பாத்திரங்களில் நடித்திருந்தார்.
மைசூர் சமஸ்தானம் (தற்போது கர்நாடகா) மாண்டியா மாவட்டத்தில் பாண்டவபுரா தாலுகாவில், மேல்கோட்டை ஊரில் வாழ்ந்த ஜெயராம் -வேதவல்லி இணையரின் மகளாக 24 பிப்ரவரி 1948ஆம் நாள் பிறந்தார். இவரது இயற்பெயர் கோமளவல்லி. இவர் தாத்தா அவ்வூரில் உள்ள கோவில் ஒன்றில் அர்ச்சகராக இருந்தார். எனினும் இவர்களின் மூதாதையர்கள் தமிழ்நாட்டைப் பூர்விகமாகக் கொண்டவர்கள். ஜெயலலிதாவுக்கு இரண்டு வயதான பொழுதே அவர் தந்தை ஜெயராம் காலமானார். அதன் பின்னர் திரைப்படத்தில் நடிக்க வந்த தாயார் வேதவல்லி தனது பெயரை சந்தியா என மாற்றிக்கொண்டார். அவர் பெங்களூரில் இருந்தபோது ஜெயலலிதா பிஷப் காட்டன் பெண்கள் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். சென்னைக்கு வந்த பின்னர், 1958-ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை சர்ச் பார்க் ப்ரேசெண்டேஷன் கான்வென்ட்டில் படித்து மெட்ரிக் தேறினார். ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் புகுமுக வகுப்பில் படிக்க அனுமதி கிடைத்த நேரத்தில் திரைப்படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. எனவே படிப்பைக் கைவிட்டு நடிகையானார். ஸ்ரீதர் இயக்கிய வெண்ணிற ஆடை என்கிற படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் நடிகையாக அறிமுகமானார்.
ஜெயலலிதாவுக்கு ஜெயக்குமார் என்ற அண்ணன் ஒருவர் இருக்கிறார். அவருக்கு தீபக் என்ற மகனும், தீபா என்ற மகளும் உள்ளனர். ஆரம்ப காலத்தில் தாய் சந்தியா இருந்த போது ஜெயக்குமார் குடும்பத்துடன் எல்லோரும் ஒன்றாகவே போயஸ் கார்டனில் இருந்தார்கள். தாய் காலமான பின்னர் ஜெயக்குமார் குடும்பத்துடன் வெளியேறி விட்டார். ஜெயக்குமாரும் அவர் மனைவியும் காலமாகிவிட்டனர். அதன்பின் ஜெயலலிதாவுக்கும் அவர்கள் குடும்பத்துக்குமிடையில் தொடர்பு விட்டுப்போனது.
ஜெயலலிதா 127 திரைப்படங்களில் நடித்திருக்கிறார். அவற்றுள் எம்.ஜி.ஆருடன் 28 படங்களில் இணைந்து நடித்தார்.[ மேலும் சிவாஜி கணேசன், எஸ். எஸ். ராஜேந்திரன், ஜெய்சங்கர், முத்துராமன், ரவிசந்திரன், சிவகுமார், ஏ. வி. எம். ராஜன், என். டி. ராமராவ், நாகேஸ்வர ராவ், தர்மேந்திரா போன்ற பல முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துள்ளார். மக்கள் பலரும் ஜெயலலிதாவின் நடிப்பை வெகுவாக ரசித்தார்கள். இவரது நடிப்பை பாராட்டி இவருக்கு ‘கலைச்செல்வி’ என்ற பட்டத்தை அளித்தார்கள்.. தன் நடிப்பின் மூலம் பல ரசிகர்களை சம்பாதித்தார்.
1982 சூன் 4ஆம் நாள் கடலூரில் நடைபெற்ற விழாவில்அ. தி. மு. க. வில் இணைந்து, அக்கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் ஆனார்.
அதன் பிறகு 1984 மார்ச் 24ஆம் நாள் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர் ஆனார். நாடாளுமன்றத்தில் தன் ஆங்கில புலமையால் பல தலைவர்களை கவர்ந்தார். தனது கன்னிப்பேச்சிலேயே அப்போது பிரதமராக இருந்த இந்திராகாந்தியைக் கவர்ந்தார். இவருக்கு நாடாளுமன்றத்தில் 185வது இருக்கை அளிக்கப்பட்டது. அந்த இருக்கை 1962 முதல் 1967 வரை தி.மு.க. நிறுவுநரும் தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வருமான கா. ந. அண்ணாதுரை அமர்ந்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இவருக்கு முன்னர், அதிமுகவைச் சேர்ந்த மோகனரங்கம் (மேலவை உறுப்பினர்) அவ்விருக்கையில் அமர்ந்திருந்தார்.
எம். ஜி. இராமச்சந்திரனின் மறைவுக்குப் பிறகு, அதிமுக இரண்டு அணிகளாகப் பிரிந்தது. கட்சியின் மூத்த தலைவர்கள் எம்.ஜி.இராமசந்திரன் மனைவி ஜானகி இராமச்சந்திரன் தலைமையில் ஓர் அணியாகவும் பிறர் ஜெ. ஜெயலலிதாவின் தலைமையில் மற்றோர் அணியாகவும் பிரிந்தனர். 1988 சனவரி 28ஆம் நாள் தமிழ்நாட்டுச் சட்டப்பேரவையில் நடைபெற்ற வாக்கெடுப்பின்பொழுது அப்பிரிவு மோதலாக வெளிப்பட்டது.
1989ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அணி சேவல் சின்னத்தில் போட்டியிட்டு 27 இடங்களைக் கைப்பற்றியது. ஜானகி தலைமையிலான அதிமுக அணி ஒரேயோர் இடத்தில் மட்டுமே வென்றது. இதனால் ஜானகி அரசியல் களத்திலிருந்து விலகினார். ஜெயலலிதா அ. தி. மு. கவின் தலைமைப் பொறுப்பேற்று அதன் பொதுச்செயலாளர் ஆனார்.[
1989ஆம் ஆண்டில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் போடிநாயக்கனூர் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஜெயலலிதா, சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவர் ஆனார். அவர் மீதும் அவருக்குத் துணையாக இருந்த ம. நடராசன் மீதும் தொடக்கப்பட்ட வழக்கு ஒன்றிற்காக நடராசன் வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் ஜெயலலிதாவின் சட்டமன்ற உறுப்பினர் பதவி விலகல் கடிதம் கிடைத்தது. அந்நிகழ்விற்குப் பின்னர், 1989 மார்ச் 25ஆம் நாள் நிதிநிலை அறிக்கையை வாசித்த கருணாநிதி தாக்கப்பட்டபொழுது ஏற்பட்ட குழப்பத்தில் ஜெயலலிதாவும் தாக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. இதனால் ஜெயலலிதா, ‘‘தி.மு.க உறுப்பினர்கள் எனது புடவையை இழுத்தார்கள். இந்தச் சட்டமன்றத்தில் பெண்களுக்கு எந்தப் பாதுகாப்பும் இல்லை. சட்டமன்றாம எப்பொழுது பெண்களுக்குப் பாதுகாப்பானதாக மாறுகிறதோ அப்பொழுதுதான் சட்டமன்றத்துக்குள் வருறவன்” என்று கூறிச்சென்றார்.
1991ஆம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் அதிமுக – காங்கிரஸ் கூட்டணி 225 தொகுதிகளில் வெற்றிபெற்றது. ஜெ. ஜெயலலிதா 1991 சூலை 24ஆம் நாள் தமிழ்நாட்டின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். அப்பொழுது அவரின் காலில் கே. செங்கோட்டையன் விழுந்தார்; அவரைத் தொடர்ந்து பிறரும் விழுந்தனர். அதிமுகவில் காலில் விழும் கலாச்சாரம் தொடங்கியது. சட்டசபை இவரைப் புகழ்ந்துரைக்கும் இடமாக மாறியது. ஜெயலலிதா தனது முதலமைச்சர் பணிக்காக ஒவ்வொரு மாதமும் ஒரு ரூபாய் மட்டும் ஊதியமாகப் பெற்றார். இவர் மீதும் அமைச்சர்கள் மீதும் எதிர்கட்சிகள் ஊழல் புகார்களை அடுக்கின. இவர் முதல்வராக இருந்த 1991–96 பதவிக் காலத்தில் பல திட்டங்களை தமிழகத்தில் கொண்ட வந்தார். பெண்கள் முன்னேற்றத்தில் மிகுந்த அக்கறைகொண்டு பல நல்ல திட்டங்களைக் கொண்டுவந்தார்.
அதேவேளையில் 1992 பிப்ரவரி 18ஆம் நாள் இவர் கும்பகோணம் மகாமகக்குளத்தில் சென்று நீராடியபொழுது ஏற்பட்ட கூட்டநெரிசலில் தர்மசாலா என்ற கட்டிடத்தின் சுவர் இடிந்துவிழுந்து 48பேர் இறந்தார்கள்.
ஜெ. ஜெயலலிதா, தன் தோழி சசிகலாவுக்கு அக்கா மகனான சுதாகரன் என்னும் 28 வயது இளைஞரை தன் மகனாகத் தத்தெடுத்தார். அவருக்கு 1995 செப்டம்பரில் ஆடம்பரமாகத் திருமணம் செய்துவைத்தார்.
1996ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஜெ.ஜெயலலிதா பர்கூர் தொகுதியில் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார். அவரது கட்சி ஆட்சியை இழந்தது. அவர் மீதும் அவரது அமைச்சரவையிலிருந்த அமைச்சர்கள் பலர் மீதும் ஊழல் வழக்குகள் தொடக்கப்பட்டன. 1996 திசம்பர் 6ஆம் நாள் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி சி.சிவப்பா, ஜெயலலிதாவின் முன்ஜாமீன் மனுவைத் தள்ளுபடி செய்தார். 1996 திசம்பர் 7ஆம் நாள் ஜெயலலிதா, ஊழல் வழக்கின் மீதான விசாரணைக்காக கைதுசெய்யப்பட்டு சென்னை மத்தியச் சிறையில் 2529ஆம் எண்கைதியாக அடைக்கப்பட்டார். அவரது வீட்டில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் 300 கிலோ தங்கம், 500 கிலோ வெள்ளி, 150 விலைமதிப்புமிக்க கைக்கடிகாரங்கள், 10,000 புடவைகள், 250 ஜோடி செருப்புகள் கைப்பற்றப்பட்டன. 28 நாள்களுக்குப் பின்னர் சிறையிலிருந்து வெளியே வந்தார். நகை அணிவதைத் தவிர்த்தார். சசிகலாவையும் அவர்தம் உறவினர்களையும் தனது வீட்டிலிருந்து வெளியேற்றினார். ஆனால், ஈராணடு சிறைவாசத்திற்குப் பின்னர் 1999ஆம் ஆண்டு ஜாமீனில் வெளியேவந்த சசிகலா மீண்டும் ஜெயலலிதாவின் வீட்டில் குடியேறினார்.
இவர் மேல் வழக்குகள் இருந்தாலும் 2001, மே அன்று முதல்வராக பதவியேற்றுக்கொண்டார். உச்ச நீதிமன்றத்தால் கண்டிக்கப்பட்டதால் நான்கு மாதம் கழித்து பதவி விலகினார். இவர் மீதான தண்டனை டான்சி வழக்கில் நீக்கப்பட்டதை தொடர்ந்து 2002, மார்ச்சு மாதம் முதல்வராக பதவியேற்றார். 2002இல் ஜெயலலிதா ஆண்டிப்பட்டியில் போட்டியிட ஏதுவாக தங்க தமிழ்ச்செல்வன் ஆண்டிப்பட்டி சட்டமன்ற தொகுதியிலிருந்து பதவி விலகினார். ] 2002, பிப்ரவரி 21ல் சட்டமன்ற இடைத்தேர்தலில் ஆண்டிப்பட்டி தொகுதியில் போட்டியிட்டு வென்றார்.[
ஜெயலலிதா தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் முதல் பெண் எதிர்க்கட்சித் தலைவராகப் பணியாற்றியிருக்கிறார்.
2001, ஏப்பிரல் 24. அன்று ஜெயலலிதா 2001, மே 10 அன்று நடைபெற்ற 2001 சட்டமன்றத் தேர்தலுக்கு 4 தொகுதிகளுக்கு ( ஆண்டிப்பட்டி, கிருஷ்ணகிரி, புவனகிரி, புதுக்கோட்டை) வேட்புமனு அளித்திருந்த மனுக்கள் தள்ளுபடி\நிராகரிக்கப்பட்டன. இவையனைத்தும் இரண்டு ஆண்டுகளுக்கோ அதற்கு மேலோ தண்டனைபெற்ற குற்றவாளிகள் தேர்தலில் போட்டியிட சட்டம் அனுமதிக்கவில்லை என்பதால் தள்ளுபடி செய்யப்பட்டன.[ ஆண்டிப்பட்டி தேர்தல் அதிகாரி செயா, கிருஷ்ணகிரி தேர்தல் அதிகாரி மதிவாணன் சட்ட உட்கூறு 8(3) கீழ் வேட்புமனுவை தள்ளுபடி செய்தனர். இச்சட்டத்தின் படி ஒருத்தர் இரு தொகுதிகளுக்கு மேல் மனு தாக்கல் செய்திருந்தால் மனுவை தள்ளுபடி செய்யலாம். ஜெயலலிதா டான்சி நில வழக்கில் இரண்டு ஆண்டுகளுக்கு மேல் தண்டனை பெற்றிருந்தார். அவரது மேல் முறையீடு மனு நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டிருந்தாலும் தேர்தலில் போட்டியிட ஜெயலலிதா முடிவு செய்தார். 2001ம் ஆண்டு ஆண்டிப்பட்டியில் தங்க. தமிழ்ச்செல்வன் அதிமுக சார்பாக வென்றார்.
2016 தமிழக சட்டமன்ற தேர்தலில் டாக்டர்.ராதாகிருஷ்ணன் நகர் போட்டியிட்டார்.அவரது வேட்புமனுவில் உள்ள சொத்து விவரங்களின்படி, செயலலிதாவுக்கு உள்ள மொத்த சொத்துக்களின் மதிப்பு ரூ.118.58 கோடியாகும், கடன் ரூ.2.04 கோடி. 2006ம் ஆண்டு ஜெயலலிதா சட்டசபை தேர்தலில் போட்டியிட்டபோது அவரின் சொத்து மதிப்பு ரூ.24.7 கோடியாக இருந்தது. 2011 சட்டசபை தேர்தலின்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.51.40 கோடியாக உயர்ந்தது.[] ஏப்பிரல் 25, 2016 அன்று வேட்புமனு அளித்தார் அத்தேர்தலில் டாக்டர். ராதாகிருஷ்ணன் நகரில் போட்டியிட்டு 97,218 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
1991 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 168 இடங்களில் போட்டியிட்டு 164 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
1998 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் 18 இடங்களில் வெற்றிபெற்று அடல் பிகாரி வாச்பாய் தலைமையில் அமைந்த மத்திய அரசில் அதிமுக அங்கம் வகித்தது.
2001 ஆம் ஆண்டு மே மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 132 இடங்களில் வெற்றிபெற்று அதிமுக ஆட்சியில் அமர்ந்தது.
2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் 150 இடங்களில் வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராக பதவியேற்றார்.
2011 ஆம் ஆண்டு செப்டம்பர்/அக்டோபர் மாதம் நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தலில், தமிழகத்தில் அப்போது இருந்த 10 (இப்போது 12) மாநகராட்சிகளிலும் வெற்றிபெற்றது.
2014 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றப் பொதுத்தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் ஜெயலலிதாவின் தலைமையில் தனித்துப் போட்டியிட்ட அதிமுக, 37இல் வென்று வரலாற்றுச் சாதனை புரிந்தது. மேலும் நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சி என்ற பெருமையையும் பெற்றது.
2016 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றப் பொதுத்தேர்தலில் அதிமுக தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகளில் 227இல் நேரடியாகவும், 7இல் அதிமுக கூட்டணியில் இருந்த மற்ற கட்சிகள் அதிமுகவின் இரட்டை இல்லை சின்னத்திலும் போட்டியிட்டு 134 தொகுதிகளில் வென்று ஆட்சியைத் தக்கவைத்தது. 1984 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆளுங்கட்சி மீண்டும் ஆட்சியைத் தக்கவைத்தது 2016இல் தான்.
2016 ஜூன் மாதம் நடைபெற்ற மாநிலங்களவைத் தேர்தலில் 4 உறுப்பினர்களை அனுப்பியதன் மூலம், நாடாளுமன்றத்தில் அதிமுகவின் பலம் 50 (37 மக்களவை + 13 மாநிலங்களவை) ஆக உயர்ந்தது. இது தமிழ்நாட்டில் எந்த ஒரு கட்சியும் செய்யாத சாதனை.
2011 சட்டமன்ற தேர்தல், 2011 உள்ளாட்சித் தேர்தல், 2014 நாடாளுமன்றத் தேர்தல், 2016 சட்டமன்றத் தேர்தல் என தொடர்ச்சியாக 4 தேர்தல்களில் பெரும்பாலும் தனித்து நின்று ஜெயலலிதா தலைமையில் அதிமுக வெற்றிவாகை சூடியது.
இவர் கலைப் படைப்புகளுக்காகவும், சமூகப் பணிகளுக்காகவும் பல விருதுகளைப் பெற்றிருக்கிறார்.
கலைமாமணி விருது – தமிழ்நாடு அரசு (1972)
சிறப்பு முனைவர் பட்டம் – சென்னைப் பல்கலைக்கழகம் (டிசம்பர் 19, 1991)
தங்க மங்கை விருது – பன்னாட்டு மனித உரிமைகளுக்கான குழு, உக்ரைன்
ஜெயலலிதா, 5 டிசம்பர் 2016 அன்று இரவு 11.30 மணிக்கு சென்னையிலுள்ள அப்போலோ மருத்துவமனையில் காலமானார். மருத்துவமனையிலிருந்து போயஸ் கார்டனிலுள்ள அவரின் வேத நிலையம் இல்லத்துக்கு ஜெயலலிதாவின் பூதவுடல் எடுத்துச் செல்லப்பட்டு, இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டன. அதன் பிறகு ராஜாஜி அரங்கத்திற்கு அவரின் உடல் எடுத்துச் செல்லப்பட்டு, பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது. இந்திய சனாதிபதி பிரணப் முகர்ஜியின் இறுதி அஞ்சலிக்குப்பின் முப்படையிடம் ஒப்படைக்கப்பட்டு மாலை 6.10 மணிக்கு ஆளுனரின் மரியாதைக்குப் பின்னர் எம்ஜிஆர் நினைவிடத்திற்குப் பக்கத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்குகளை ஜெயலலிதாவின் தோழி சசிகலாவும், ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக்கும் செய்தனர்.
ஜெயலலிதா உயிரிழந்த செய்தியறிந்து தமிழகத்தில் சுமார் 470 பேர் மாரடைப்பாலும், தற்கொலை செய்து கொண்டும் உயிரிழந்தனர். மேலும் உயிரிழந்தோர் குடும்பத்திற்கு தலா ரூ.3 இலட்சம் நிதியுதவி வழங்குவதாகவும்., அதிர்ச்சியிலிருந்து மீளமுடியா தொண்டர் ஒருவர் தனது சுண்டு விரலை வெட்டிக்கொண்டார். அவருக்கு ரூ.50,000 நிதியுதவி வழங்குவதாகவும் அஇஅதிமுக சார்பில் செய்திக்குறிப்பு வெளியிடப்பட்டது.


