
எங்களை அல் சுமேரிடா அரங்கத்தில் அசோக் அய்யா அழைத்து வந்து மேடை அருகில் அமர்ந்திருந்த நிர்வாகிகளிடம் அறிமுகம் படுத்தினார். முதலில் அதிகமாக கூட்டம் வரவில்லை. எனவே அவர்களோடு அமர்ந்து நாங்கள் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தோம்.
அசோக் அய்யா, மற்ற வேலையை வேகமாக பார்க்க ஆரம்பித்து விட்டார். சற்று நேரத்தில் மிகப்பிரமாண்டமான நிகழ்ச்சி நடைபெற உள்ளது. எனவே அனைத்து முன்னேற்பாடும் சரியாக இருக்கவேண்டும். ஒளி, ஒலி காட்சிகள் உள்பட உணவு வகைகள் வழங்குபவர்கள் மற்றும் வர்ணனையாளர்கள் என அனைவரையும் சந்தித்து அனைத்து ம் சரியாக இருக்கிறதா என சரிபார்க்க கிளம்பி விட்டார்.

நாங்களும் சுறுசுறுப்பானோம். ஏன் என்றால் கண்காட்சியில் நாங்கள் கொண்டு வந்த படங்களை பார்வைக்கு வைத்திருக்கிறார்களா? எனப் பார்க்கவேண்டும். ஏற்கனவே இரண்டு டேபிளில் அதை அடுக்கி வைத்து விட்டு, அவ்வூரில் இருந்த நான்கு சிறுவர்களை அழைத்து வந்து அவர்களிடம் அந்த டேபிளில் உள்ள புகைப்படம் குறித்து விளக்கம் அளித்தோம்.
அவர்கள் நாலுபேரும் நாங்கள் கூறியதை வைத்து வருபவர்களிடம் விளக்கம் அளிக்க தயாரானர்கள். இந்த இடத்தில் நான் ஒன்றை நினைவு படுத்த விரும்புகிறேன். பெரும் பாலுமே அமெரிக்காவில் வாழும் இந்தியர்கள் பலருக்கும் தமிழில் பேச தெரியும். ஆனால் எழுத படிக்க தெரியாது. ஆகவே தான் தான் நான் என்னுடைய “நவீன தாமிரபரணி மகாத்மியம்” நூலில் க். யூ. ஆர் கோடு மூலமாக பேசி, அதன் விவரத்தினை யூடியூப் மூலம் பார்க்கும் வசதி செய்திருந்தேன். அந்த நூலையும் பார்வைக்கு வைத்து இருந்தேன். ஏன் என்றால் தமிழ் எழுதபடிக்க தெரியாதவர், தாமிரபரணி படித்துறைகளை பற்றி தமிழில் கேட்டு புரிந்து கொள்ளட்டுமே என நினைத்தேன். ஆனால் அதற்கு பெரிய வாய்ப்பு இல்லை. குழந்தைகளை கூட தமிழில் எழுத படிக்க ஆவண செய்திருந்தார்கள். தங்களது வாரிசுகள் தமிழ் படிக்க வேண்டும் என்பதில் குவைத் தமிழர்கள் நன்கு புரிந்து வைத்திருந்தனர். ஆகவே அவர்களுக்கு தமிழில் தனி படிப்பு படிக்கவும் ஏற்பாடு செய்திருந்தார்கள். தமிழ் பள்ளிக்கூடமும் இங்கே உள்ளது. எனவே இவர்கள் சிறுவர் முதல் பெரியவர் வரை தமிழ் எழுத படிக்க தெரிந்தவர்களாகவே இருந்தது. இது எனக்கு மிகவும் சந்தோசமாக இருந்தது. ஆனாலும் நவீன தாமிரபரணி மகாத்மியம் அனைவருக்கும் பிடித்திருந்தது. அந்த நூலில் உள்ள க்யூஆர் கோடை ஸ்கேன் செய்து தாமிரபரணி புகழை கேட்டறிந்தனர்.
நுழைவு வாயிலின் அருகில் நான் எழுதிய புத்தகம் 30 யையும், முனைவர் சுதாகர் அய்யா எழுதிய இரண்டு புத்தக த்தினையும் விற்பனைக்கு வைத்திருந்தோம்.
சிறிது நேரத்தில் கூட்டம் சாரை சாரையாக வந்தது. இதில் குவைத் வாழ் தமிழ்நாடு பொறியாளர்கள் சங்க உறுப்பினர்களும், அவர்கள் குடும்பத்துக்கு மட்டுமே அழைப்பு. எனவே அவர்கள் அழைப்பிதழை காட்டியபடியே உள்ளே வந்து இருக்கையில் அமர்ந்தனர். பார்வைக்கு வைக்கப்பட்ட எங்களது புத்தகங்களையும், காட்சிக்கு வைக்கப்பட்ட தொல்லியல் படங்களையும் கண்டு கழித்தனர். தமிழகம் என்றாலே கீழடி தொல்லியல் மட்டுமே என பலரும் அறிந்து இருந்தார்கள். நாங்கள் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை என படங்களை காட்டியபோது அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர். இது எல்லாம் தாமிரபரணிகரை நாகரிகம் என்றபோது வியந்து பார்த்தனர்.
மேலும் கீழடி நாகரிகம் என்பது கடைச்சங்கம், அதற்-கு முந்தைய இடைச்சங்கம் தாமிரபரணி கரை நாகரீகம். இந்த நாகரிகம் சிந்து சமவெளி நாகரிகத்துக்கு இணையானது என்று கூறியவுடன் அனைவரும் வியந்து நின்று பல கேள்விகளை கேட்டபடி இருந்தனர். நிறைய பேருடைய அறிமுகம் கிடைத்தது. குறிப்பாக எங்கள் ஊர் தாமிரபரணி ஆற்றங்கரையின் எதிர்கரையில் உள்ள மணக்கரையை சேர்ந்த சங்கரபாண்டியன் ஆசிரியரின் மகள் ரேவதி அவர்களின் கணவர் சாமி அவர்கள் எங்களை சந்தித்தார். எனது ஊர் முத்தாலங்குறிச்சி என்றவுடன் , அவர் திருமணம் முடித்த ஊருக்கு எதிர் ஊர் என கூறி விசாரித்தார். தற்போது சங்கரபாண்டியன் ஆசிரியரின் குடும்பம் பாளையங்கோட்டை கிருஷ்ணா புரத்தில் உள்ளது. குறிப்பாக கிருஷ்ணாபுரத்தில் காடாக இருந்த போது முதல் முதலில் வீடு கட்டி குடியேறிவர் சங்கரபாண்டியன் சார்தான். தற்போது கிருஷ்ணாபுரம் மிகப்பெரிய நகரமாக மாறிவிட்டது. அதை நினைவு கூர்ந்து பேசினேன். மேலும் இவர்கள் குடும்பத்தினர் நடத்திய ரேவதி டீ ஸ்டால் செய்துங்கநல்லூரில் 2000 ஆம் ஆண்டு காலத்தில் மிகப் பிரபலமாக பேசப்பட்டது என்று நினைவு கூர்ந்தேன்.
இவர்களை போல நிறைய பேர் என்னை சந்தித்தார்கள். அவர்கள் தமிழகத்தில் அதுவும் திருநெல் வேலியில் உள்ள மிகப்பெரிய ஆளுமைகளின் உறவுகாரர்களாக இருந்தார்கள். அவர்களிடம் பேசும் போதும் குவைத் நகரம் , இந்தியாவுக்குள் இருப்பது போலவே எனக்கு உணர்வை ஏற்படுத்தியது. அந்த பிரமாண்டமான அரங்கில் முழுவதும் தமிழ் சொந்தங்களை பார்த்தோம். கலையரங்கமும் மிகப்பிரமாண்டமாக இருந்தது.
இந்த அரங்கில் சுமார் காலை 9.30 மணி அளவில் ஆதிச்சநல்லூர் மற்றும் தாமிரபரணி பற்றி பேச என்னை அழைத்தார்கள். அந்த சமயத்தில் முன் இருக்கையில்அமர்ந்து பலர் ஆர்வத்துடன் கேட்டனர். திரையில் தாமிரபரணி தோன்றும் பூங்குளம், அகத்தியர் சிலை, பொதிகை மலை உச்சிக்கு நடந்து செல்லும் மிக கடினமான பயணம் பற்றி படங்களை காட்டிப் பேசினேன். அதன் பின் தாமிபரணி ஏன் வற்றாமல் இருக்கிறது என ஆங்கில ஆட்சியர் பங்கிள் துரையை மேற்கோள் காட்டி பேசினேன். செயற்கையாக கட்டப்பட்ட அணைகள் குறித்தும், நம் முன்னோர்கள் கட்டிய அணைக்கட்டு குறித்தும் பேசினேன்.
ஆதிச்சநல்லூர் அகழாய்வு குறித்தும், 17 வருடம் அறிக்கை தராத அரசிடம் போராடி எனது வழக்கு மூலம் அறிக்கை பெற்ற வரலாறு, தற்போது இந்தியாவிலேயே முதல் முதலில் அமைந்த ஆதிச்சநல்லூர் சைட் மியூசியம் அமைந்துள்ளது பற்றி பேசியதோடு மட்டுமல்லாமல் இந்தியா வந்தால் ஆதிச்சநல்லூர் மியூசியத்தினை காண தாங்கள் குடும்பத்தோடு வரவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டேன். விரைவில் ஆதிச்சநல்லூர், சிவகளை, கொற்கை அருங்காட்சியகம் மாநில அரசு சார்பில் பாளையங்கோட்டை ரெட்டியார் பட்டி மலையில் மதுரை & கன்னியாகுமரி மெயின் ரோட்டில் அமைய போகிறது என்ற தகவலையும் தெரிவித்தேன்.
எனக்கு பொன்னாடை போர்த்தினார்கள். சங்க தலைவர் கிருஷ்ண ஜெகன், பொதுச்செயலாளர் அசோக்குமார் அருள்சாமி, நிதித்துறை செயலாளர் சுப்பிரமணின் சின்னத்துரை ஆகியோர் எனக்கு பொன்னாடை போர்த்தி, சந்தனமாலை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார்கள்.
குவைத் தமிழ்ச்சொந்தங்களின் பலத்த கரகோஷத்துடன் நான் மேடையை விட்டு கீழே இறங்கினேன். என்னிடம் நான் படத்தில் காட்டிய இடங்களை நாங்கள் ஊருக்கு வந்தால் காட்டலாமா? என கேள்வி கேட்டனர் நம் மக்கள். “கண்டிப்பாக வாருங்கள் கூட்டிச்சென்று காட்டுகிறேன்” என கூறிவிட்டு முன இருக்கையில் அமர்ந்தேன். என்னோடு தலைவர் கிருஷ்ண ஜெகனும் அமர்ந்து கொண்டார்.
அடுத்து 11 மணி அளவில் எகிப்தும் தமிழகமும் என்ற தலைப்பில் முனைவர் சுதாகர் பேச மேடையில் ஏறினார். இவர் கல்லூரியில் பல மேடைகளில் ஏறி இறங்கியவர். எனவே மிகச்சிறப்பாக பேசினார். எகிப்து எந்த அளவுக்கு தமிழர் களோடு உறவில் உள்ளது என்பதை படம் மூலம் விளக்கி காட்டினார்.
ஏற்கனவே தமிழர்கள் உலகில் இல்லாத இடங்களே இல்லை என்ற கூற்று உண்டு. அந்த வகையில் முனைவர் சுதாகர் கூற்றின் படி எகிப்துக்கும் தமிழகத்துக்கு உள்ள உறவு உண்மை என தெரியவந்தது. அனைவரும் ஆர்வத்துடன் கேட்டனர்.
சங்கத்துணைத்தலைவர் பாலசுப்பிரமணிய முத்தையா, இணைச்செயலாளர்கள் கிஷோர் குமார், ஆறுமுகம் இணைப்பொருளாளர் சாமுவேல் ஆகியோர் மேடைக்கு வந்து முனைவர் சுதாகர் அவர்களுக்கு சால்வை போர்த்தி, சந்தனமாலை அணிவித்து, நினைவு பரிசு வழங்கினார்கள்.
அதன் பின் என் அருகில் முனைவர் சுதாகர் வந்து அமர்ந்தார். அடுத்து சில நிமிடங்கள் மேடை பரபரப்பானது.
அடுத்து சிறுவர் சிறுமியர் வரிசையாக நின்றனர். அவர்களுக்கான மாறுவேடப்போட்டி நடந்தது. நம்ம ஊர் பாரதியார், காந்தி, விடுதலைபோராட்ட வீரர்கள் வீரபாண்டிய கட்டபொம்மன் உள்பட 100க்காணக்கானவர் மாறுவேடக்காரர்கள் திரண்டு வந்து மேடை ஏறினர். ஒவ்வொருவரும் வீர வசனம் பேசி எங்களை மகிழ வைத்தனர். இதில் யார் சிறப்பான வேடமிட்டவர்கள் என கண்டு பிடிக்க நடுவர் குழு சற்று தடுமாறி விட்டது என்றே கூறலாம்.
தொடர்ந்து குழு ஆடல் பாடல் நடந்தது. இதைப் பார்த்தவுடன் எனக்கு சந்தோசமாக இருந்தது. இங்கு நடந்த நிகழ்ச்சி அனைத்தும் விஜய் தொலைக்காட்சி, சன் தொலைக்காட்சி, ஜி தமிழ் தொலைக்காட்சியில் நடைபெறும் ஆடல் நிகழ்ச்சிக்கு இணையாக தரமாக இருந்தது.
இன்னொரு ஆச்சரியமான விசயம் என்னெவென்றால். குவைத் நகரில் நமது இந்தியக் கொடியை ஏந்திக்கொண்டு நமது குழந்தைகள் மேடையில் நடனமாடிய போது என்னை அறியாமலேயே உடல் சிலிர்த்து கொண்டது.
அதோடு மட்டுமல்லாமல் வேப்பில்லை என்ற மாரியம்மன் பாடலில் நமது குழந்தைகள் மாரியம்மாக வந்து கண்ணை உருட்டி, கையில் சூலாயுதத்தினை வைத்துக்கொண்ட வெறித்தனமாக ஆடியது மிகச்சிறப்பாக இருந்தது. இஸ்லாமிய நாட்டில் இந்திய கலாச்சார பாடல்கள் பாடும் போது நம்மவர்களின் மண் பற்று எனக்கு ஆச்சரியத்தையும் ஆனந்தத் தினையும் அளித்தது.
காஞ்சனா பாடலுக்கு ஏற்ப நமது குழந்தைகளின் நடனம் வியக்க வைத்தது. பாடலின் இறுதியில் குடலை உருவுவது போல காட்சி மிகப்பிரமாண்டமாக இருந்தது.
“பெண்ணே உன்னை பார்த்தால்” என்ற பாடலுக்கு நமது குழந்தைகள் மேலை நாட்டு நாகரிகத்தினை கண்முன் நிறுத்தி ஆடியது மனதுக்கு நிறைவாக இருந்தது.
“ரெண்டக்க ரெண்டக்க” என்ற பாடலுக்கு குழந்தைகள் ஆடிய ஆட்டம் மிகச்சிறப்பாக இருந்தது. தொடர்ந்து ஆடல் பாடல் தொடர்ந்து கொண்டே இருந்தது.
எங்கிருந்துதான் கூட்டம் வந்தது என்றே தெரியவில்லை. ஆயிரத்திற்கும் மேலான மக்கள் மண்டபத்தில திரண்டு நின்றனர்.
“இவர்களை இங்குக் கொண்டு வந்து நிறுத்தியது குழந்தைகளின் திறமை மற்றும் கடின உழைப்பு” என்பதை ஒவ்வொரு நிகழ்ச்சியும் எடுத்துக் காட்டியது.
இந்த நேரத்தில் அனைவரையும் கவரும் விதமாக தமிழ்நாடு குவைத் பொறியாளர்கள் சங்கத்தினர் ஆடிய நடனம் பிரமாண்டமாக இருந்தது. சங்க வேலைகளுக்கு இடையே நடன பயிற்சியில் சிறப்பாக சென்றுஇருக்கிறது என்பது தான் உண்மை.
இவர்கள் இந்த மேடை அரகேற்றத்துக்காக எத்தனை நாள் காத்து இருந்து இருப்பார்கள். எத்தனை நாள் இதற்காக பயிற்சி எடுத்து இருப்பார்கள் என நினைக்கும் போது ஆச்சரியமாகவே இருந்தது.
தங்கள் வேலைபளுவுக்கு இடையே இந்த கொண்டாட்டத்திற்காக உழைத்த நல்ல உள்ளங்களுக்கு நன்றி சொல்லி கொண்டோம். நாங்கள் தாயகத்தில் இருந்து வந்து மக்களுக்கு உள்ளூர் பாசத்தினை ஊட்ட வேண்டும் என்று நினைத்தோம்.
ஆனால் தமிழை, தமிழ் பண்பாட்டை, தாயகத்தினை மறக்காமல் இவர்கள் செய்யும் கலை நிகழ்ச்சி எங்களை மறந்து அப்படியே அமர வைத்து விட்டது.
இப்போது தான் புரிந்தது. ஏன் நம்மை தமிழ்ச் காலாச்சார வேஷ்டி சட்டை அணிய சொன்னார்கள் என்று. திரும்பி பார்த்தேன் சங்கத்தின் தலைவர் செயலாளர், பொருளாளர், உறுப்பினர்கள் அனைவரும் வேஷ்டி சட்டையில் வலம் வந்து கொண்டிருந்ததை கண்ட போது பெருமிதமாக இருந்தது.
எங்கும் தமிழ் எதிலும் தமிழ்.
மாணவ மாணவிகள் நல்ல கருத்துக்களை எடுத்துச் சொல்லும் நாடகங்களையும் இயற்றிக் காட்டினர். திரைப் படத் தரத்தில் அவைகள் இருந்தன. அவர்கள் சொல்ல நினைத்த கருத்து உணர்வுப் பூர்வமான பார்வையாளர்களின் மனத்திரையில் ஏற்றினார்கள்.
ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் எனத் தமிழ் மக்கள் குவைத் மண்ணில் பட்டையைக் கிளப்பினார்கள். பிரமிப்பாக இருந்தது. அருமையான ஏற்பாடுகள் மற்றும் சிறந்த நிகழ்ச்சி நிரல்களால் அனைவருக்கும் சந்தோசத்தினை ஏற்படுத்தியது.
முந்தைய நாள் இரவில் அசோக் அவர்கள் தங்களின் குழுவினருடன் உழைத்த உழைப்பு இதற்குத்தான் எனப் புரிந்தது.
பிரபிப்பாக இருந்த இந்த நிகழ்ச்சி அவர்களின் பேஸ் புக் வழியாக நேரலையில் ஒளி பரப்பிக்கொண்டும் இருந்தார்கள்.
தொடர்ந்து நாங்கள் அமர்ந்திருக்கும் இடதுக்கு ஒரு வாலிபர் வந்து முனைவர் சுதாகர் அவர்களை வணங்கி நின்றார். அவர் பெயர் சுபுகனி. சுபுகனி தென்காசி அருகே உள்ள ஊத்துமலையைச் சார்ந்தவர். சுபுகானி 2022 இல் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் விஷிநீ பயோடெக்னாலஜி படித்து முடித்தார். இப்போது குவைத்தில் உள்ள ராயல் ஹயாத் என்ற மருத்துவமனையில் மைக்ரோ பயாலஜிஸ்ட்டாகப் பணிபுரிகிறார். அயல்நாட்டில் முனைவர் சுதாகர் அவரது மாணவரைச் சந்தித்தது அவருக்கு மகிழ்ச்சியை தந்திருக்க வேண்டும். துள்ளி குதித்து எழுத்தார். மாணவரோடு மேடையை விட்டு அகன்று வந்தார்.
சிறிது நேரத்தில் மேடை மேலும் களை கட்டியது. நிறைய மீம்ஸ் போட்டார்கள். குவைத்தில் வாழும் நமது தமிழர்கள் இயற்றிய மீம்ஸாம். நிறைய மீம்ஸ் குவைத் வாழ்வியல் சார்ந்தே இருந்தது. டிக் டாக், ரீல்ஸ் என குவைத் தமிழர்கள் பல்வேறு திறமைகளை திரை மூலம் காட்டிக்கொண்டிருந்தார்கள். இவர்கள் எல்லாம் குவைத் மாநகரில் பிரபலமாக உள்ள தமிழர்கள் என்றார்கள். எவ்வளவு திறமையை வளர்த்து வைத்திருக்கிறார்கள்.
மதிய உணவு தயாராக இருந்தது. ஆனால் யாரும் சாப்பிட செல்ல தயாராக இல்லை. கிட்டத்தட்ட, நமது ஊரில் அந்த காலத்தில் கிராமத்தில் பொங்கல் பண்டிகை இப்படித்தான் நடக்கும். என்ன வீர விளையாட்டான கபடி, சிலம்பம், போன்றவை மட்டும் இங்கே இல்லை. ஆனால் மற்றபடி மனதுக்கு நிறைவாக இருந்தது.
இந்த வேளையில் எங்களை இஞ்சினியர் கிருஷ்ண குமார் அழைத்தார். “வாருங்கள் அப்படியே வெளியே போய் சர்ப்பிட்டு விட்டு வருவோம்”. என்றார்.
நாங்கள் நிர்வாகிகளிடம் கூறிவிட்டு, அவரோடு சாப்பிட கிளம்பினோம்.
அவர்களும் “சரி வெளியே சாப்பிடுங்கள். என்ன வகை சாப்பிட போகறீர்கள்” என கேட்டனர்.
“ஈரான் நாட்டு உணவு” என்றார் கிருஷ்ண குமார்.
“அது என்ன ஈரான் நாட்டு உணவு” .
ஆர்வத்துடன் அவருடன் கிளம்பினோம்.
(குவைத் பயணம் தொடரும்)


