சாத்தான்குளம் அருகே வியாபாரியின் வீட்டு பீரோவில் இருந்த 100 பவுன் நகைகள் திருடு போனது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பிரமணிய புரத்தை சேர்ந்தவர் தங்கவேல் மனைவி ஜெயராணி (55). இவர் ஈரோடு அணைக்கட்டு ஆலம்பட்டி வலசு பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவருக்கு 2 மகள்கள், ஒரு மகன் உள்ளனர். கணவர் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இவர் தனது 100 பவுன் நகையை சாத்தான்குளம் அருகே உள்ள சுப்பிரமணிய புரத்தில் வசித்து வரும் அவரது தாயார் சண்முககனி மூலம் சாத்தான்குளம் கூட்டுறவு கடன் சங்கத்தில் லாக்கரில் வைத்து பாதுகாத்து வந்துள்ளார்.
இந்நிலையில் சுப்பிரமணியபுரத்தில் உள்ள முத்தாரம்மன் கோவில் கொடைவிழா சமீபத்தில் நடந்தது. அப்போது குடும்பத்துடன் ஊருக்கு வந்திருந்த ஜெயராணி, கூட்டுறவு கடன் சங்க லாக்கரில் வைத்திருந்த 100 பவுன் நகையை எடுத்து பயன்படுத்தினார். திருவிழா முடிந்ததும் அந்த நகைகளை கூட்டுறவு வங்கி லாக்கரில் வைக்க கூறி அவரது தங்கை மகள் பவித்ரா தேவியிடம் கொடுத்து விட்டு ஈரோடு சென்றார். அவர் வாங்கி வீட்டு பீரோவில் நகையை வைத்துள்ளார்.
இந்நிலையில் பீரோவில் இருந்த 100 பவுன் நகையை எடுக்க சென்றபோது நகை அனைத்தும் திருட்டுப்போனது தெரியவந்தது. இதுகுறித்து பவித்ரா தேவி, ஜெயராணிக்கு தகவல் தெரிவித்தார். அதிர்ச்சி அடைந்த அவர் உடனே ஊருக்கு வந்து தட்டார்மடம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் இன்ஸ்பெக்டர் பவுலோஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


