சாத்தான்குளத்தில் டிஎஸ்பி அலுவலகம் கட்டி முடிக்கப்பட்டு ஒராண்டாகியும் இன்னும் பயன்பாட்டுக்கு திறக்கப்படாமல் இருப்பதாகவும், உடனடியாக திறக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் டிஎஸ்பி அலுவலகம் முஸ்லீம் தெருவில் வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. டிஎஸ்பி வேறு இடத்தில் வாடகைக்கு இருந்து வருகிறார். சாத்தான்குளம் காவல் நிலையத்தை கண்காணிக்கும் வகையில் டிஎஸ்பி அலுவலகம் அமைக்க வேண்டும் என வியாபாரிகள் வலியுறுத்தினர். அதன்படி காவலர் குடியிருப்பு அருகில் இடம் தேர்வு செய்யப்பட்டு டிஎஸ்பி அலுவலகம் மற்றும் அவரது குடியிருப்பு தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகம் சார்பில் ரூ.1கோடியே 10 லட்சம் மதிப்பில் கடந்த ஆண்டு கட்டி முடிக்கப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்டதும் கடந்த மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அதனை பார்வையிட்டு விரைவில் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்திருந்தார். . கட்டடம் கட்டி முடிக்கப்பட்டாலும் இன்னும் டிஎஸ்பி அலுவலகம் வாடகை கட்டிடத்தில் செயல்படுகிறது. ஆதலால் மாவட்ட எஸ்பி, இதனை கவனித்து டிஎஸ்பி அலுவலகத்தை உடனடியாக திறந்து புதியகட்டடத்தில் செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வியாபாரிகள் வலியுறுத்தியுள்ளனர்.


