கனிமொழி கருணாநிதி 5 சனவரி 1968 திராவிட முன்னேற்றக் கழகத்தைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதி ஆவார். தற்போது 17வது மக்களவையின் உறுப்பினராக உள்ளார். அதற்கு முன்புவரை அவர் மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். இவர் தமிழக அரசியல் தலைவர் மு.கருணாநிதியின் மகள் ஆவார். இதழியல், இலக்கியத் துறைகளிலும் கனிமொழிக்கு ஆர்வம் இருந்து வந்திருக்கின்றது.
மு.கருணாநிதிக்கு ராஜாத்திக்கும் 1968ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர் கனிமொழி. பள்ளிப் படிப்பை சர்ச் பார்க்கிலும் பெரிசண்டேஷன் கான்வன்டிலும், வணிகவியலில் முதுகலைப் பட்டத்தை எத்திராஜ் கல்லூரியிலும் கனிமொழி பயின்றார்.
சங்க இலக்கியங்களில் ஆர்வம் கொண்ட இவர், பல இலக்கிய கூட்டங்களில் கலந்து கொண்டிருக்கிறார். இந்திய முன்னாள் அமைச்சர் ப.சிதம்பரத்தின் மகன் கார்த்திக் சிதம்பரத்துடன் இணைந்து கருத்து என்னும் இணைய தளத்தை நடத்தி வருகிறார்.
தி இந்து நாளிதழில் துணை ஆசிரியராக தொடக்க காலத்தில் பணியாற்றினார். தமிழ் முரசு, குங்குமம் ஆகிய பத்திரிகைகளிலும் பணியாற்றிய இவர் 2007ஆம் ஆண்டு சென்னை சங்கமம் என்னும் கலை, பண்பாட்டு நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளராக இயங்கினார். ஈழ இனப் படுகொலைக்கு எதிராக அவ்வப்பொழுது குரல் கொடுத்து வந்த கனிமொழி, குறும்படம் இயக்குவதிலும் ஆர்வம் கொண்டவர். திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலை செயல்திட்டக்குழுவில் உறுப்பினராக உள்ளார். திராவிட முன்னேற்றக் கழகத்தின் கலை இலக்கிய பகுத்தறிவு பேரவை தலைவராகவும் உள்ளார்.
2007 சூலை இந்திய மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்வு செய்யப்பட்ட இவரது பதவிக்காலம் 2013ம் ஆண்டு முடிவடைந்தது. இரண்டாவது முறையாக 2013இல் மீண்டும் மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் 2019 ஆம் ஆண்டு நடந்த இந்திய மக்களவைத் தேர்தலில், தூத்துக்குடி தொகுதியிலிருந்து, திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் போட்டியிட்டு, இந்திய நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கருவறை வாசனை, அகத்திணை, பார்வைகள், கருக்கும் மருதாணி, ஆகிய கவிதை தொகுப்புகளையும், சிலப்பதிகாரம் பாம்பே ஜெயசிறீயுடன் இணைந்து இசைத்தொகுப்பையும் எழுதியுள்ளார்.


