தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையிலும், ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையிலும் சுகாதார அலுவலர்கள் தீவிர ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி ஆணையாளர் உத்தரவின் பேரில், மாநகராட்சி பகுதிகளில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுக்கும் வகையிலும், ஏடிஸ் கொசுப்புழு உற்பத்தியை கட்டுப்படுத்தும் வகையிலும் மாநகர் நல அலுவலர் தலைமையில் சுகாதார பிரிவின் சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன் ஒரு பகுதியாக பழைய இரும்பு, டயர்கள், பேரல்கள், பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் இதர கழிவுப் பொருட்களை விற்பனைக்காக சேகரித்து வைக்கும் கடைகள் மற்றும் கிடங்குகளில் சுகாதார அலுவலர்கள் மற்றும் சுகாதார ஆய்வாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வின் போது மழைநீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ள பழைய டயர்கள், பேரல்கள், இரும்பு பொருட்களில் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகிறதா எனவும், கடைகள் மற்றும் கிடங்குகளில் உள்ள பழைய பொருட்கள் முறையாக பராமரிக்கப்படுகிறதா எனவும் ஆய்வு செய்யப்பட்டது.

பராமரிப்பற்று மழைநீர் தேங்கும் நிலையில் உள்ள பழைய பொருட்களை உடனடியாக அகற்றக் கோரி நோட்டீஸ் வழங்கி எச்சரிக்கை செய்யப்பட்டது. மேலும் வளாகத்தை தூய்மையாக வைத்திருக்க கடைகள் மற்றும் கிடங்கு உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளதால் இதுபோன்ற ஆய்வுகள் தொடர்ந்து நடைபெறும் எனவும், கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் நிலை கண்டறியப்பட்டால் அபராதம் விதித்து கடை மற்றும் கிடங்கிற்கு சீல் வைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என மாநகராட்சி சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


