சாத்தான்குளம் அருகே விவசாயியைத் தாக்கி நகை பறித்த வழக்கில், வழக்கறிஞரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் அருகே சவேரியார்புரத்தைச் சேர்ந்தவர் நெல்சன் டேவிட் (65). விவசாயி. கடந்த ஜூலை 23ஆம்தேதி தனது தோட்டத்திலிருந்த அவரை, காரில் வந்த மர்ம நபர்கள் தாக்கி, 9.5 பவுன் நகைகளைப் பறித்துச் சென்றனராம். இதில், காயமடைந்த அவர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். புகாரின்பேரில், சாத்தான்குளம் காவல் ஆய்வாளர் ஸ்டீபன் வழக்குப் பதிந்தார்.
அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் மகன் கிறிஸ்டோபர் என்பவர் திடீரென மாயமானதாகத் தெரியவந்தது. வள்ளியூரில் பதுங்கியிருந்த அவரை சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்தபோது, தான் திருநெல்வேலியில் வழக்கறிஞராகப் பணியாற்றி வருவதாகவும், மது போதையில் தனது நண்பருடன் சென்று நெல்சன் டேவிட்டை தாக்கி நகையைப் பறித்ததாகவும் போலீசாரிடம் ஒப்புக்கொண்டாராம். அவரை போலீசார் கைது செய்து, கார், நகைகளைப் பறிமுதல் செய்தனர். அவரது நண்பரைத் தேடி வருகின்றனர்.


