தூத்துக்குடி மாவட்டத்தில் மானிய விலையில் மாடித்தோட்ட தளைகள் காய்கறி விதைத் தளைகள் ஊட்டச்சத்து தளைகள் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தில் 10750 பயனாளிகள் பயன்பெற்றுள்ளனர்.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் வெளியிட்ட செய்திக் குறிப்பு : தமிழகத்தில் கரோனா இரண்டாம் அலையின் போது நாடு முழுவதும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு போக்குவரத்து பாதிக்கப்பட்டதினால் வெளி மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து காய்கறிகள் வரத்து குறைவு ஏற்பட்டு மக்களுடைய அன்றாட தேவைகள் பாதிக்கப்பட்டதோடு காய்கறிகளின் விலையேற்றம் அதிகரித்தது. எனவே பொதுமக்களின் அன்றாட தேவைகளை தாங்களே பூர்த்தி செய்திடவும், அவர்களது வாழ்வாதாரத்தை உயர்த்திடவும் பரந்த நோக்கத்தோடு தமிழக முதலமைச்சர் அன்றாட தேவைக்கான நஞ்சில்லா காய்கறி விதைகளை மானிய விலையில் வழங்கும் திட்டத்தை துவக்கி வைத்தார்.
நஞ்சில்லா காய்கறிகளை மகளிர் தங்களது இல்லங்களிலே உற்பத்தி செய்வதற்கு ஊரகப்பகுதிகளில் ரூ.60/- மதிப்புள்ள 12 வகை காய்கறி விதைகள் அடங்கிய தொகுப்பு 75% மானியத்தில் ரூ.15/-க்கும், நகர்ப்புறங்களில் ரூ.900/-மதிப்புள்ள 6 வகை காய்கறி விதைகள் அடங்கிய மாடி தோட்ட தொகுப்பு 75% மானியத்தில் ரூ.225/-க்கும், மக்களின் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், ஊட்டச்சத்தை மேம்படுத்தவும், கண் பார்வைக்கு பப்பாளி, நோய் எதிர்ப்பு சக்திக்கு எலுமிச்சை, பார்வைக்கு இரும்புசத்துக்கு முருங்கையும், கறி வேப்பிலையும் மற்றும் கற்பூரவல்லி, திப்பிலி, கற்றாழை, புதினா போன்ற மருத்துவ குணம் கொண்ட மூலிகை செடி அடங்கிய ரூ.100/- மதிப்புள்ள 75% மானியத்தில் ரூ.25/-க்கும் தமிழ்நாடு முழுவதும் முதலமைச்சர் (06.12.2021) அன்று சென்னையில் துவக்கி வைத்தார்.
தொடர்ந்து தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தோட்டக் கலைத் துறையின் மூலம் பயனாளிகளுக்கு மானிய விலையில் மாடித் தோட்ட தளைகள் காய்கறி விதைத் தளைகள் ஊட்டச்சத்து தளைகள் ஆகியவற்றை வழங்கும் திட்டத்தினை சமூக நலன மற்றும் மனித உரிமைத்துறை அமைச்சர் பெ.கீதாஜீவன் துவக்கி வைத்து பயனாளிகளுக்கு மாடித்தோட்ட தளைகள் காய்கறி விதைத் தளைகள் ஊட்டச்சத்து தளைகள் ஆகியவற்றை வழங்கினார். ரூ.675 மானிய விலையில் 750 எண்ணிக்கையிலான மாடித்தோட்ட தளைகள் ஊரகப் பகுதிகளில் ரூ.45 மானிய விலையில் 4000 எண்ணிக்கையிலான காய்கறி விதைத் தளைகள், ரூ.75 மானிய விலையில் 6000 எண்ணிக்கையிலான ஊட்டச்சத்து தளைகள் என மொத்தம் 10750 பயனாளிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது” என ஆட்சியர் தெரிவித்துள்ளார்.


