திருக்கோளுர் வைத்தமாநிதி பெருமாள் குபேரனுக்கு நிதி கொடுத்த தினத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் காலை முதல் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம்.
தூத்துக்குடி மாவட்டம் தாமிரபரணி நதிக்கரையில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றானதும், நவதிருப்பதி ஸ்தலங்களில் 8 வது திருத்தலமாக விளங்குவது திருக்கோளுர் வைத்தமாநிதி பெருமாள் திருக்கோவிலாகும்.
நவக்கிரகங்களில் செவ்வாய்க்கு அதிபதி. இத்திருக்கோவிலில் மூலவர் கிழக்கு நோக்கிய சயனக் கோலத்தில் நிசேபவித்தன் வைத்தமாநிதிப்பெருமாள். தாயார் குமுதவல்லி, கோளுர் வள்ளி. இங்கு குபேரன் ஜோதியாய் வணங்கும் தலம். சுவாமி ராமானுஜர் காலத்தில் இத்தலத்தில் வாழ்வதை பெருமையாக கூறும் திருக்கோளுர் பெண்பிள்ளை ரகசியம் என்றும் சிறப்பான பாடல் கிடைத்த தலமாகும். கண்ணினுன் சிறுத்ததாம்பு இயற்றிய ஸ்ரீ மதுரகவி ஆழ்வார் அவதார தலம். நம்மாழ்வாரால் மங்களாசாசனம் செய்த திருத்தலம்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இத்திருக்கோயிலில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் நடைபெற்றாலும் மாசி மாதம் புனர்பூச நட்சத்திரத்தில் பெருமாள் குபேரனுக்கு நிதி கொடுத்ததான தினத்தை இங்கு சிறப்பாக கொண்டாடுகின்றனர். நிதியை இழந்த குபேரனுக்கு அவன் இழந்த செல்வத்தை பாதுகாத்து அளந்ததால் மரக்காலைத் தலைக்கு வைத்து பள்ளி கொண்ட கோலத்தில் மூலவர் அருள்பாலிக்கின்றார். பக்தர்கள் தங்களின் பணத்தை பெருமாளின் தலைப்பகுதியில் மரக்காலில் வைத்து வணங்கி பெற்று செல்கின்றனர். அதனை அவர்கள் வீடுகளில் வைத்தால் செல்வம் பெருகும் என்பது நம்பிக்கை.
இதற்காக இன்று மூலவருக்கு சிறப்பு பூச்சட்டை அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத வைத்தமாநிதி பெருமாள் மற்றும் தாயர் குமுதவல்லி, கோளுர் வள்ளி தேவியருடன் உடன் சுவாமி மதுரகவி ஆழ்வார் குலசேகரஆழ்வார் உடன் பூப்பந்தல் கீழ் சிறப்பு அலங்காரத்தில் மகா மண்டபத்தில் சேவை சாதித்தருளினார். உள்ளூர் மக்கள் மட்டுமல்லாமல் வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து நீண்ட வரிசையில் காத்திருந்து சயன கோலத்தில் இருக்கும் வைத்தமாநிதி பெருமாளையும் தாயாருடன் அருள்பாலிக்கும் உற்சவ மூர்த்திகளையும் தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை திருக்கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.


