உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகளைச் சமரச முறையில் முடித்து வைப்பதற்காக “சிறப்பு மக்கள் நீதிமன்றம்” நாடு முழுவதும் வரும் ஆகஸ்ட் 21 முதல் 23 வரை (21.08.2026 – 23.08.2026) உச்ச நீதிமன்றத்தில் நடைபெற உள்ளது.
இந்தச் சிறப்பு மக்கள் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளக் கூடியதாக அடையாளம் காணப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டம் சார்ந்த வழக்குகளின் விபரங்கள், தூத்துக்குடி ஒருங்கிணைந்த நீதிமன்ற கட்டிட வளாகத்தில் உள்ள மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு அலுவலகத்தில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளன.
அடையாளம் காணப்பட்ட தங்களது மாவட்ட வழக்குகளை இணக்கமான முறையில் தீர்த்துக் கொள்ளும் பொருட்டு, தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில் “சிறப்பு முன் அமர்வு” வரும் ஜூலை 7 (07.07.2026) முதல் நடைபெற உள்ளது. இந்த முன் அமர்வில் வழக்காடிகள் நேரிலோ அல்லது இணையதள வசதியான காணொலி (Video Conferencing) வாயிலாகவோ கலந்துகொண்டு தங்களது வழக்குகளுக்குத் தீர்வு காணலாம்.
இந்தச் சிறப்பு மக்கள் நீதிமன்றம் முன்பாகச் சமரசமாக முடித்துக் கொள்ளப்படும் வழக்குகளுக்குச் செலுத்தப்பட்ட நீதிமன்றக் கட்டணம் (Court Fee) முழுமையாகத் திரும்பப் பெற வாய்ப்புள்ளது. மேலும், இவ்வாறு முடிக்கப்படும் வழக்குகளுக்கு மேல்முறையீடு (Appeal) கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.
விண்ணப்பிக்கும் முறை : வழக்குத் தரப்பினர் மற்றும் வழக்கறிஞர்கள் உச்ச நீதிமன்ற இணையதளத்தில் (www.sci.gov.in) கொடுக்கப்பட்டுள்ள கூகுள் படிவத்தைப் பூர்த்தி செய்து வரும் ஜூலை 31-ஆம் தேதிக்குள் (31.07.2026) தங்களது கோரிக்கையைச் சமர்ப்பிக்க வேண்டும்.
பொதுமக்களுக்கு இதுகுறித்து ஏதேனும் சந்தேகங்கள் இருப்பின், தூத்துக்குடி மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவினை நேரிலோ அல்லது disathoothukkudi@gmail.com என்ற மின்னஞ்சல் மூலமாகவோ, 0461-2320222 என்ற தொலைபேசி எண் வழியாகவோ தொடர்பு கொண்டு விபரங்களை அறிந்து கொள்ளலாம் என மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுத் தலைவர்/முதன்மை மாவட்ட நீதிபதி தெரிவித்துள்ளார்.


