தூத்துக்குடியில் தரமற்ற முறையில் மாநகராட்சி கட்டிடப் பணிகள் மேற்கொள்வது தொடர்பாக ஒப்பந்ததாரர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகராட்சி ஆணையரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சமூக ஆர்வலர் விஜயன் தூத்துக்குடி மாநகராட்சி ஆணையருக்கு அனுப்பியுள்ள மனுவில், “3-வது மைல் சுடுகாட்டில் கொட்டப்பட்டுள்ள மணல், சிவந்தகுளம் பகுதியில் அரசு கட்டிடத்தின் கட்டுமானப் பணிக்காக ஒப்பந்ததாரரால் பயன்படுத்தப்படுகிறது. கட்டிடத்திற்கு குவாரி மணல்தான் பயன்படுத்த வேண்டுமே தவிர, சுடுகாட்டில் கொட்டப்பட்டுள்ள மணல் அல்ல. அந்த மணல் கட்டுமானப் பணிக்கு தகுதியற்ற கழிவு மணல் ஆகும்.
எனவே, மேற்கண்ட கட்டிடப் பணியை நேரில் ஆய்வு செய்து, ஒப்பந்ததாரரை கழிவு மணலை அகற்றிவிட்டு உடனடியாக குவாரி மணலை பயன்படுத்துமாறு உத்தரவிடும்படி கேட்டுக்கொள்கிறேன். ஒப்பந்ததாரருக்கும் அரசுக்கும் இடையேயான ஒப்பந்தத்தின்படி குவாரி மணல்தான் பயன்படுத்த வேண்டும், கழிவு மணல் அல்ல. ஒப்பந்ததாரரை கருப்புப் பட்டியலில் சேர்த்து, ஒப்பந்தப் பணியை உடனடியாக நிறுத்தி, புதிய ஒப்பந்ததாரரை நியமிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


