முத்தாலங்குறிச்சியில் மாவட்ட வன அலுவலர் திடீர் ஆய்வு செய்தார். கூடங்குளம் அணுமின் நிலையத்திற்குக் கயத்தாற்றிலிருந்து மின் விநியோகப் பாதை (பவர் லைன்) கொண்டு செல்லப்படுகிறது. இந்த மின் பாதை முத்தாலங்குறிச்சி வழியாகச் செல்கிறது. இப்பகுதியில், தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள முள்செடிகளை அகற்றி, சுமார் 50 ஆயிரம் பனை விதைகளை விதைத்துத் தர வேண்டும் என்று பொதுமக்கள் சார்பில் முத்தாலங்குறிச்சி காமராசு, மாவட்ட வன அலுவலர் இளையராஜா அவர்களிடம் கோரிக்கை வைத்திருந்தார்.
இக்கோரிக்கையை ஏற்று, முத்தாலங்குறிச்சிப் பகுதியை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்ய மாவட்ட வன அலுவலர் இளையராஜா அவர்கள் வருகை புரிந்தார். அப்போது அவர் முத்தாலங்குறிச்சி முக்குறுணி அரிசி விநாயகர், லட்சுமி நரசிம்மர் மற்றும் சிவகாமி சமேத வீரபாண்டீஸ்வரர் ஆலயங்களில் சாமி தரிசனம் செய்தார். அவருக்கு லட்சுமி நரசிம்மர் பக்த ஜனா சபா சங்கத் தலைவர் சோமசுந்தரம் தலைமையில் சிறப்பு மரியாதை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து, அவர் பனை விதைகள் நடப்படவுள்ள இடங்களையும், மின் பாதை செல்லும் இடங்களையும் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இந்நிகழ்வின் போது பவர் பிளான்ட் மேலாளர் முருகேசன், அண்டார்டிகா பயணக் குழு முன்னாள் தலைவர் இளங்கோ, கிருஷ்ணாபுரம் புவிக்காந்தவியல் மையத்தைச் சேர்ந்த ஜவகர், கிராம உதயம் மேலாளர் வேல்முருகன், லட்சுமி நரசிம்மர் பக்த ஜனா சபா சங்கத் தலைவர் சோமசுந்தரம், செயலாளர் சுவாமிநாதன், அறங்காவலர்கள் முத்தாலங்குறிச்சி காமராசு, வள்ளி, குணவதியம்மன் ஆலய பக்த ஜனா சபா உறுப்பினர் ஆறுமுகம், பஞ்சாயத்து உதவியாளர் இசக்கிமுத்து, சடையகோபால், கிராம உதயம் செல்வன் மற்றும் விஜயகுமார் உள்படப் பலர் உடனிருந்தனர்.


