ஏரல் / தூத்துக்குடி:
தூத்துக்குடி மாவட்ட உதவி ஆட்சியர் (பயிற்சி) திரு. பாட்டீல் கிருஷ்ணா பபுருவான், இ.ஆ.ப., அவர்கள் இன்று (03.07.2026) ஏரல் தாலுகா, சிறுதொண்டநல்லூர் கிராமத்தில் தனது கிராம நிர்வாக அலுவலர் (VAO) முறையான களப்பயிற்சியினை மேற்கொண்டார்.
அப்போது, சிறுதொண்டநல்லூர் கிராம நிர்வாக அலுவலகத்திற்கு வருகை தந்த அவர், அலுவலகத்தின் முன்புற வளாகத்தில் மரக்கன்று ஒன்றினை நட்டினார். அப்போது அவர், புவி வெப்பமயமாதலைத் தடுக்கவும், மழைவளத்தைப் பெருக்கவும் மரம் நடுதல் எவ்வளவு முக்கியம் என்பதை வலியுறுத்திப் பேசினார். மேலும், நட்ட மரக்கன்றுகளை முறையாகப் பாதுகாத்து வளர்க்க வேண்டும் எனத் துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
ஆய்வின் போது, அரசு அலுவலகங்களின் தூய்மைக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் சுட்டிக்காட்டினார். கிராம நிர்வாக அலுவலகக் கோப்புகளையும், அலுவலக வளாகம் மற்றும் அதன் சுற்றுப்புறப் பகுதியையும் எப்போதும் தூய்மையாகவும் சுகாதாரமாகவும் பராமரிக்க வேண்டும் என்று அங்கிருந்த பணியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
உதவி ஆட்சியர் கிராமத்தில் நேரடியாகப் பயிற்சி மேற்கொள்வதை அறிந்த சுற்றுவட்டாரப் பகுதி பொதுமக்கள், தங்களின் கோரிக்கைகள் குறித்த மனுக்களை அவரிடம் நேரில் வழங்கினர். பொதுமக்களின் குறைகளைக் கேட்டறிந்த உதவி ஆட்சியர் அவர்கள், பெறப்பட்ட அனைத்து மனுக்களின் மீதும் தாமதமின்றி, உடனடியாக உரிய நடவடிக்கை எடுத்து தீர்வு காண வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.


