தூத்துக்குடி வ.உ. சிதம்பரம் கல்லூரியின் பவள விழா ஆண்டை முன்னிட்டு, கல்வித் துறையில் ஒரு முக்கிய உள்கட்டமைப்பு முயற்சியாக சுப்பையா வித்யாலயம் பள்ளியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்தானது.
உயர்கல்வியின் பரப்பை விரிவுபடுத்துவதோடு, பள்ளி மாணவர்கள் எதிர்காலத்தில் வெற்றிபெற தேவையான ஆராய்ச்சி மனப்பான்மை, தன்னம்பிக்கை, மற்றும் உயர்கல்வி வாய்ப்புகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதே இந்த ஒப்பந்தத்தின் முக்கிய நோக்கமாகும். மேலும், மாணவர்களுக்கு டிஜிட்டல் அறிவுத்திறன், வேலைவாய்ப்புத் திறன், மொழித்திறன் மேம்பாடு, தொழில்துறை நிறுவனங்களுக்கான கல்விச் சுற்றுப்பயணங்கள், விளையாட்டு மற்றும் பண்பாட்டு நிகழ்வுகள் மூலம் முழுமையான ஆளுமை வளர்ச்சியை ஊக்குவித்து சமூகப் பொறுப்புள்ள குடிமக்களாக உருவாக்க இந்த உடன்படிக்கை வழிவகை செய்கிறது.
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தில், வ.உ.சி கல்லூரியின் முதல்வர் மற்றும் சுப்பையா வித்யாலயம் பள்ளியின் தலைமையாசிரியை விபாஸ்ரீ ஆகியோர், பள்ளியின் செயலாளர் முரளி ராஜகோபாலன் முன்னிலையில் கையெழுத்திட்டனர். இந்நிகழ்வு, கல்வி மேம்பாடு மற்றும் சமூக முன்னேற்றத்தை நோக்கமாகக் கொண்ட நீண்டகால கூட்டாண்மையின் தொடக்கமாக அமைந்துள்ளது.
மாணவர் சமூகத்தின் நலனுக்காக இந்த ஒத்துழைப்பை வழங்கிய பள்ளி மற்றும் கல்லூரி நிர்வாகத்தினருக்குக் கல்லூரி முதல்வர் தனது நன்றியைத் தெரிவித்துக் கொண்டார். இந்தத் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் முதன்மைத் தொடர்பு அதிகாரியாக வ.உ.சி கல்லூரியின் வேதியியல் துறை உதவிப் பேராசிரியர் டாக்டர் ஷீபா தவமணி செயல்படுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.


