எட்டயபுரத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தை மாவட்ட முதன்மை நீதிபதி சுபாதேவி திறந்து வைத்தார்.
எட்டயபுரத்தில் நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டும் எனப் பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதனை ஏற்று, கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு நீதிமன்றம் அமைப்பதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. நீதிமன்றத்திற்கான நிரந்தரக் கட்டிடம் கட்ட இடங்கள் ஆய்வு செய்யப்பட்டு வரும் நிலையில், பணிகள் தாமதமாவதைத் தவிர்க்கத் தற்காலிக இடத்தில் நீதிமன்றத்தை இயக்க முடிவு செய்யப்பட்டது. இதன்படி, எட்டயபுரம் கோட்டை மேலத்தெருவில் உள்ள தற்காலிக கட்டிடத்தில் இந்த மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் அமைக்கப்பட்டுள்ளது.
இப்புதிய கட்டிடத்தின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட முதன்மை நீதிபதி சுபாதேவி தலைமை தாங்கி, நீதிமன்றத்தைத் திறந்து வைத்துப் பாரம்பரியக் குத்துவிளக்கேற்றினார். இந்நிகழ்வில் தலைமை குற்றவியல் நீதித்துறை நீதிபதி பிரியா, நீதிபதிகள் மாரிக்காளை, கருப்பசாமி, ஆனந்த், மணிமேகலா, ஞானஜெரிதா பிளவர், தரணிதரன், சுபாஷினி, ஹரி ராமகிருஷ்ணன், மூத்த வழக்கறிஞர்கள் செல்லப்பாண்டியன், ஜோசப் செங்குட்டுவன், தமிழ்நாடு – புதுச்சேரி பார் கவுன்சில் உறுப்பினர் மைக்கேல் ஸ்டேனிஸ் பிரபு உட்பட வழக்கறிஞர்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இப்புதிய நீதிமன்றத்தில் எட்டயபுரம், மாசார்பட்டி, மற்றும் கொப்பம்பட்டி பிர்காக்களுக்கு உட்பட்ட சிவில் மற்றும் குற்றவியல் வழக்குகள் அனைத்தும் இனி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் என முதன்மை நீதிபதி சுபாதேவி தெரிவித்தார். இதனைத் தொடர்ந்து, புதிய எட்டயபுரம் நீதிமன்றத்தின் முதல் நீதிபதியாக ஹரி ராமகிருஷ்ணன் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனை அடுத்து நீதிமன்றப் பணிகள் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கின.


