குறுக்குத்துறை முருகன்கோயிலில் உள்ள துவாரங்கள் கோயிலை மிதக்கவிடாமல் ஒரே இடத்தில் இருக்க பயன்படுது. உள்ளே வெளிச்சத்தை பரவ லாகக் கொண்டுவர பயன்படுது. வெப் பத்தைக் குறைக்க உதவுது. நல்ல காற் றோட்டமாக இருக்க உதவுது. எக்கோ எழாமல் இருக்க பயன்படுது. இப்படி ஐந்து வகை பயன்கள் அந்த 24 துவாரங்கள் வழியாக கிடைக்குது. இப்படியான ஒரு தொழில்நுட்பத்தை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு நமது முன்னோர்கள் செய்திருப்பதுதான் ஆச்சரியம்.
இதைக் கட்டினவரை நினைத் துப்பார்த்தால் ரொம்ப வியப்பாக இருக்கு. இன்னைக்கு ஆற்றின் மேல் போடப்படும் பாலங்கள் எல்லாம் சீக்கிரமே பழுதாகிடுது. ஆனா, அன்னைக்கு ஆற்றின் உள்ளே இப்படியொரு கட்டுமானம் செய்திருப்பது தமிழர்களின் கட்டுமான அறிவுக்கும் தொன் மைக்கும் மிகப்பெரிய சான்றுனு சொல்லணும்.
இதில் முக்கியமான இன் னொரு விஷயம் – கோயில் வெளிப் பிரகாரத்தில் கிடைத்த கல்வெட்டு தான் 950 ஆண்டுகள். அப்படினா கருவறை எப்ப வந்த துனு ஒரு கேள்வி வருது.
இது அதுக்கும் முன்னாடி இருந்திருக்கலாம் என்பதுதான் எங்கள் அனுமானம். வெளிப் பிரகாரத்திற்கு முன்னாடியே கருவறை வந்திருக்கும்.
அதனால், எங்கள் அனுமா னத்தின்படி இந்தக் கோயில் 1,250 ஆண்டுகள் பழமையானதாக இருக்கும்னு நினைக்கிறோம். ஆனா. ஆதாரம் இல்ல.
இதிலுள்ள பொறியியல் தொழில் நுட்பங்களை எல்லாம் மனோன் மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பணியாற் றும் ஸ்டாலின் என்கிற பொறி யியலாளரை அழைச்சிட்டுப் போய் டீகோட் செய்தோம்.
அப்படியாக வெள்ளத்தைத் தாங்கி நிற்கும் குறுக்குத் துறை கோயிலின் ரகசியங்களை வெளிக்கொண்டு வந் திருக்கோம்…” என சந்தோஷமாகச் சொல்கிறார் பேரா சிரியர் சுதாகர் சிவ சுப்பிரமணியம்.
இந்த குறுக்குத் துறை முருகன் கோயிலுக்கு தலப்புராணம் உள்ளது. அந்த தலப்புராணம் கூட பல்வேறு வரலாற்றை நமக்கு சொல்கிறது. அதையும் நாம் தெரிந்து கொள்ளவேண்டும். ஏற்கனவே நான் தினகரன் நாளிதழுக்காக இந்த கோயிலை பற்றி எழுதியுள்ளேன். எனவே எனக்கு வரலாறு எழுதுவது இலகுவாக இருந்தது.
தாமிரபரணி ஆற்றுக்குள் மிக அழகாய் இருக்கும் ஆலயம் இது. தாமிரபரணி தண்ணீர் மூலமாகதான் அனைத்துக் கோயிலிலும் கருவறை மூர்த்திக்கு அபிஷேகம் செய்வது நடைமுறை. ஆனால் தாமிரபரணியே வருடம் தோறும் வெள்ளக்காலங்களில் கோயிலுக்கு அபிஷேகம் செய்கிறது என்றால் அது அதிசயம் தானே. அந்த அதிசயம் திருநெல்வேலி குறுக்குத்துறை முருகன் கோயிலில் நடக்கிறது.
மார்கழி மற்றும் கர்த்திகை மாதங்களில் அடை மழை காலத்தில் தாமிரபரணியின் வெள்ளம் கோயிலையே அபிஷேகம் செய்வது போல மூழ்கடித்து செல்கிறது. இந்தச் சமயத்தில் இங்குள்ள உற்சவர் சிலைகளை மேலக்கோயிலில் கொண்டு சென்று வைத்து பூஜை நடக்கும். பழனிக்கும் திருச்செந்தூருக் கும் ஒரே நேரத்தில் செல்வது கடினம். குறுக்குத்துறை முருகன் கோயிலுக்கும், அருகில் உள்ள மேலக்கோயிலுக்கும் சென்று வந்தால் பழனிக்கும் திருச்செந்தூருக்கும் சென்று தரிசித்த புண்ணியம் கிட்டும்.
திருச்செந்தூர் முருகன்கோயில் தோன்றிய காலத்திலேயே குறுக்குதுறை முருகனின் மேலக் கோயில் தோன்றியுள்ளது. இதற்கு காரணம், குறுக்குதுறையில் உள்ள கற்கள். இந்த இடத்துக்கு திருவுருமாமலை என்று பெயர். இங்குள்ள கற்கள் சிலை வடிக்க ஏற்றது. திருச்செந்தூர் மூலவர் சிலை இங்குதான் உருவாக்கப்பட்டது. அப்போது, இரண்டு சிலையை ஒன்றுபோல் உருவாக்கினர். அதில் ஒன்றைத் திருச்செந்தூர் கருவறையிலும், மற்றொன்றைக் குறுக்குத்துறை மேலக்கோயில் கருவறையிலும் வைத்து வணங்கி வருகிறார்கள்.
இங்குள்ள பாறையில் முருகன் உருவாக்கப்பட்டு திருச்செந்தூர் கருவறைக்குக் கொண்டு செல்லப்பட்டதால் இந்தக் கோயிலை திருச்செந்தூரின் தாய்வீடு என்றழைக்கிறார்கள். திருவுருமா மலை என்ற குறுக்குத்துறை பாறையில் ஒரு முருகன் சிலை வள்ளி தெய்வானையுடன் செதுக்கப் பட்டுள்ளது. ஆனால், இந்த சிலையைப் பாறையில் இருந்து எடுக்க முடியாமல் சிற்பி அப்படியே விட்டுவிட்டார்.
இந்தச் சிலையைப் பார்ப்பவர்கள் கையெடுத்து வணங்கத் தூண்டும் அளவிற்கு அம்சமாக இருந்தது. இந்த முருகன் சிலை வெயிலில் காய்ந்தும், மழையில் நனைந்தும் பாழ்பட்டு கிடந்தது. அந்த காலத்தில் இந்தப் பகுதியில் தண்ணீர் துறை எதுவும் கிடையாது.
திருநெல்வேலி மக்களுக்குச் சிந்துபூந்துறை மட்டுமே சிறந்த தண்ணீர் துறையாக விளங்கியது. ஒரு சிலர் இங்கு நீராட வருவதுண்டு. வடமலையப்ப பிள்ளை என்ற சீமானின் தயார் இந்தத் துறையில் வந்து நீராடி செல்வார். அப்போது அழகான முருகனின் சிலையை பார்த்தது«ம் கையெடுத்து வணங்கினார். தொடர்ந்து வெயிலிலும், பனியிலும் சிலை நனையாமல் இருக்க ஓலையைக் கொண்டு முருகனுக்கு கூடாரம் அமைத்தார். தினமும் பக்தியுடன் அவர் தாமிரபரணியில் நீராடி முருகப் பெருமானுக்கு மலர் சூட்டி வணங்கினார். இதைக் கண்டு அனைவரும் வணங்க ஆரம்பித்தனர். இந்தக் கோயிலில் பல அற்புதங்கள் நிகழ்ந்தது. திருவா வடுதுறை ஆதீனத்தார் இக்கோயில் நிர்வாக பொறுப்பை ஏற்று விரிவுபடுத்தினர். ஆகம விதிப் படி கர்ப்பகிரகம், முன் மண்டபம், அர்த்த மண்டபம், மகா மண்டபத்துடன் இக்கோயில் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது. இது ஒரு குடவரைக்கோயில். எப்படி திருச்செந்தூரில் வள்ளி குகை குடவரையாக இருப்பது போலேவே குறுக்குத்துறை கோயில் கர்ப்ப கிரகமும் குடவரையாக அமைக்கப்பட்டுள்ளது. அதில் பஞ்சமூர்த்திகள், தம்பதி சகிதமாக உள்ளது மிகச் சிறப்பானதாகும்.
தாமிரபரணி ஆற்றின் நடுவில் அமைந்துள்ள இந்தக் கோயில் அருகே நீராழி மண்டபம் மிகச்சிறப்பாக அமைந்துள்ளது. சித்தர்களும், ஞானிகளும் இங்கு ஸ்நானம் செய்து, அருகில் உள்ள கல்படுக்கையில் அமர்ந்து தியானம் செய்தனர். இதனால் இந்த கோயில் மேலும் சிறப்படைந்தது. ஐப்பசி மாத அடை மழையின் போதும் கார்த்திகை மாதத்திலும் இந்தக் கோயில் தாமிரபரணி ஆற்று வெள்ளத்துக்குள் இருக்கும். ஆகவே, இந்த காலங்களில் உற்சவர் மேலக்கோயிலில் கொண்டு வைக்கப்படுவார்.
(நதி வற்றாமல் ஓடும்)


