காயல்பட்டினத்தில் சாலையில் திரியும் தெரு நாய்கள், கால்நடைகளை கட்டுப்படுத்த வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தூத்துக்குடி மாவட்டம், காயல்பட்டினம் நகராட்சி பகுதியில் – தெரு நாய்கள், தெருவில் திரியும் மாடுகள் காரணமாக, நகர மக்கள் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகிறார்கள். இது சம்பந்தமாக பலமுறை புகார்கள் – அரசின் பல்வேறு துறைகளிடம் கொடுத்தும், இதுவரை இதற்கு தீர்வுகள் வழங்கப்படவில்லை.
இவ்விசயத்தில் அரசின் கவனத்தை ஈர்க்கும் நோக்கில், காயல்பட்டினம் சீதக்காதில் திடலில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மெகா நிர்வாகி ஹாபிழ் ஸாலிஹ் நெறிப்படுத்திட, இறைமறையில் இருந்து வசனங்களை முத்து ஷாஹுல் ஹாமீது ஓதினார். மார்கிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகியும், முன்னாள் நகர்மன்ற உறுப்பினருமான திருத்துவராஜ் – இப்பிரசனையினால் தன்னை போன்ற மூத்த குடிமக்கள் சந்திக்கும் பிரச்சினைகளை எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மெகா அமைப்பின் நிர்வாகி ஹாமீத் ரிபாய், ஆர்ப்பாட்டத்தின் நோக்கம் குறித்து விரிவாக பேசினார். விரைவில் நிரந்தர தீர்வு வழங்கவில்லை என்றால், நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம், நோன்பு பெருநாளை அடுத்து, நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார். மெகா அமைப்பின் செயற்குழு உறுப்பினர் ஹாபிழ் MM முஜாஹித் அலி உடைய நன்றியுரையுடன் ஆர்ப்பாட்டம் நிறைவுற்றது. இதில் நகரின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் திரளான பெண்கள் உட்பட பொதுமக்கள், அரசியல் கட்சிகள், அமைப்புகள் பிரமுகர்கள் கலந்துகொண்டனர்


