தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு அருகே உள்ள அகரம் கிராமத்தைச் சேர்ந்தவர்கள் ராமலிங்கம் பிச்சம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு 5 மகள்கள் 4 மகன்கள் உள்ளனர்.
இன்று ராமலிங்கம் தனது 105வது பிறந்தநாளை பேரன் பேத்திகள் மட்டுமல்லாமல் ஓட்டன் ஓட்டிகளுடன் பனைமரங்கள் நிறைந்த தோட்டத்தின் நடுவே மிக பிரமாண்டமாக கொண்டாடி மகிழ்ந்தார்.
இந்த நிகழ்ச்சிக்காக பனைமரங்கள் அதிகம் கொண்ட அகரம் அருகே தாமிரபரணி ஆற்றின் கரையோரம் மேடை அமைக்கப்பட்டிருந்தது. மேடையில் ராமலிங்கம் கம்பீரமாக வீற்றிருந்தார். அவரது பிள்ளைகள், பேரன், பேத்திகள், பூட்டன், பூட்டிகள், ஓட்டன், ஓட்டிகள் என அனைவரும் அவரின் காலில் விழுந்து வணங்கி அவரிடம் ஆசி பெற்றனர்.
இந்த விழாவிற்கு வருகை தந்த உறவினர்கள் பொன்னாடை அணிவித்து அவரிடம் நல்லாசி பெற்றனர். அதை தொடர்ந்து மகன்கள் ராமலிங்கத்திற்கு மாலை அணிவித்தனர். தொடர்ந்து மிக பிரமாண்டமாக உருவாக்கப்பட்ட கேக்கை ராமலிங்கம் வெட்டினார். அருகில் இருந்த பேரன் பேத்திகள் பார்டி ஸ்பிரே அடித்து உற்சாகமாக மகிழ்ந்தனர். கேக் வெட்டிய ராமலிங்கம் கண்களில் ஆனந்த கண்ணீர் ததும்பியது. அவருடன் மேடையில் நின்ற மகன்கள், மகள்கள், பேரன், பேத்திகள், பூட்டன், பூட்டிகள் என அனைவரும் கைதட்டி உற்சாகப்படுத்தி அவருக்கு வாழ்த்து தெரிவித்து மகிழ்ந்தனர். பேரன், பேத்திகள், ஓட்டன், ஓட்டிகள் அவருக்கு கை கொடுத்து மகிழ்ச்சியுடன் வாழ்த்துக்களை தெரிவித்தனர். வெட்டிய கேக்களை பேரன்மார்கள் நிகழ்ச்சிக்கு வந்த அனைவருக்கும் பகிர்ந்தளித்து மகிழ்ந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் உறவினர்கள், ஊர் பொதுமக்கள், நண்பர்கள் என 500க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு அவரிடம் ஆசி பெற்றனர். இந்த நிகழ்ச்சிக்காக 600 பேருக்கு அந்த பகுதியிலேயே வடை பாயாசத்துடன் சைவ உணவு செய்யப்பட்டு அனைவருக்கும் பரிமாறப்பட்டது. இந்த நிகழ்ச்சியை படம் பிடிப்பதற்காக புகைப்பட கலைஞர்கள் வரவழைக்கப்பட்டிருந்தனர். வெடிகள் போட்டு இந்த பிறந்தநாள் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது.
தற்போது உள்ள இந்த கால கட்டத்தில் நச்சுத்தன்மை வாய்ந்த உணவு போன்ற பழக்க வழக்கங்களால் ஒவ்வொருவரும் சராசரியாக 50 வயதை கடந்து செல்வதே கடினம். ஆனால் 105 வயதை கடந்து தற்போதும் கம்பீரமாக தினமும் ஊருக்குள் நடமாடி வருகிறார் ராமலிங்கம்.


