செய்துங்கநல்லூரில் மிகவும் பழமையான கோயில் வரதராஜ பெருமாள் கோயில். இந்த கோயில் வளாகத்தில் புழகத்தில் இல்லாத புனித கிணறு மற்றும் தூர்ந்து போன தெப்பக்குளம் இருந்தது. இதை பராமரிக்க வேண்டும் என பக்தர்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர். இதற்கிடையில் இந்த புனித கிணற்றை கடந்த மாதம் நெல்லை உழவாரபணிகுழு தலைவர் முத்துகிருஷ்ணன் தலைமையில் தூர்வாரினர். தொடர்ந்து கடந்த மூன்று வாரங்களாக இந்த கோயிலில் தூர்ந்து கிடந்த தெப்பக்குளத்தினை தூர்வாரும் பணி நடந்தது. இந்த பணியை நகார்கோயில் திருச்சிற்றம்பல சபை மற்றும் நெல்லை உழவாரப்பணி குழு வினர் செய்தனர். இந்த பணியினை கோயில் நிர்வாக அதிகாரி கோகுல மணி கண்டன் பார்வையிட்டார். உழவாரப்பணி முத்துகிருஷ்ணன் மற்றும் உழவாரப்பணியினரோடு ஆலோசனை செய்தார். தொடர்ந்து கோயிலில் உள்ள தெப்பக்குளத்தினை சுற்றி சுவர் கட்டி படித்துறை அமைக்கும் பணி நடைபெற அறநிலையத்துறை மூலம் வேண்டிய உதவிகளை செய்து தருவதாக வாக்களித்தார். 100 ஆண்டுகளுக்கு முன்பு தெப்பத்திருவிழா உள்பட பல்வேறு சிறப்பு வழிபாடுகள் நடந்த இந்த கோயிலில் தற்போது ஒரு கால பூஜை மட்டும் நடந்து வருகிறது . தொடர்ந்து தெப்பக்குளம் தூர்வாரிய பின்பு பக்தர்கள் உதவியுடன் தெப்ப உற்சவம், கருடசேவை உள்பட பல்வேறு திருவிழாக்கள் நடைபெறவேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


