தூத்துக்குடி மாவட்ட மக்கள் குறை களையும் நாள் கூட்டத்தில் பல்வேறு நலதிட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் வழங்கினார்.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட ஆட்சியர் க.இளம்பகவத் தலைமையில் மக்கள் குறை களையும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து கல்வி உதவித்தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா, பட்டா மாறுதல் உத்தரவு, வரன்முறைப்படுத்தி பட்டா, கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் வீடு வேண்டி, தொழில் கடனுதவி, முதியோர் உதவித்தொகை, விதவை உதவித்தொகை, வேலைவாய்ப்பு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைள் அடங்கிய 640 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
பெறப்பட்ட கோரிக்கை மனுக்கள் மீது உரியநடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறைசார்ந்த அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார். அதனைத்தொடர்ந்து, ஒட்டனத்தம் பகுதியைச் சார்ந்த செல்லத்துரை என்பவர் 108 ஆம்புலன்ஸ் வேலையில் 16 ஆண்டுகாலம் பணிபுரிந்து கடந்த 12.10.2023 அன்று இயற்கை மரணமடைந்தைத் தொடர்ந்து, EMRI GHS மூலம் பெறப்பட்ட ரூ.5 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சியர் அன்னாரது குடும்பத்தினருக்கு வழங்கினார்.
மேலும், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறையின் சார்பில் 5 நபர்களுக்கு விலையில்லா மின்மோட்டாருடன் கூடிய தையல் இயந்திரம், 5 நபர்களுக்கு விலையில்லா தேய்ப்புப் பெட்டி மற்றும் 10 நபர்களுக்கு கிறிஸ்தவ தேவாலயங்களில் பணிபுரியும் உபதேசியர்கள் நல வாரிய அடையாள அட்டைகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்.
முன்னதாக, மாவட்ட ஆட்சியர், மாற்றுத்திறனாளிகளை நேரில் சந்தித்து, முதலமைச்சரின் கனவு இல்லம் திட்டத்தில் வீடு கட்டி தர வேண்டி, இலவச வீட்டுமனைப் பட்டா, உதவித்தொகை, இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர், காதொலிக் கருவி, வேலைவாய்ப்பு உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய 18 கோரிக்கை மனுக்களைப் பெற்றுக்கொண்டு அவர்களின் கோரிக்கைகளை கனிவுடன் கேட்டறிந்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் ச.அஜய் சீனிவாசன், சமூக பாதுகாப்பு திட்ட தனித் துணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், உதவி இயக்குநர் (ஊராட்சிகள்) உலகநாதன், மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் பிரம்மநாயகம், மற்றும் அனைத்துத் துறை அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


