கருங்குளத்தில் வகுளகிரி மலை மேல் அமைந்துள்ளது வெங்கடாஜலபதி கோவில். இந்த கோவிலில் மூலவர் வெங்கடாஜலபதி சந்தன கட்டையில் அருள் பாலிக்கிறார்.
இந்த கோவிலில் சித்ரா பௌர்ணமி விழா வருடம் தோறும் மிகச் சிறப்பாக நடைபெறும். அதேபோல் இந்த ஆண்டுக்கான சித்ரா பௌர்ணமி விழா கடந்த வாரம் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீனிவாசபெருமாள் மலையில் இருந்து பொன்சப்பரத்தில் கீழே இறங்கும் நிகழ்ச்சி இன்று வெகு விமர்சையாக நடந்தது.
இதற்காக காலை கோவில் நடை திறக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து இரவு 11.30 மணியளவில் கருங்குளம் வகுளகிரி மலையில் இருந்து உற்சவர் ஸ்ரீனிவாச பெருமாள் ஸ்ரீதேவி, பூதேவியுடன் வருடத்துக்கு ஒருமுறை மட்டும் பொன் சப்பரத்தில் கீழே இறங்கும் நிகழ்ச்சி நடந்தது.
இதற்காக கோவில் முன்பு சிறப்பு தீபாராதனை நடந்தது. தொடர்ந்து ஸ்ரீனிவாசர் வகுளகிரி மலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க பொன் சப்பரத்தில் இறங்கினார். இதில் ஏராளமான பக்தர்கள் பொன்சப்பரத்தை தாங்கியபடி மலையில் இருந்து கீழே கொண்டு வந்தனர்.
மலை அடிவாரத்தில் சுவாமிக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது. இந்த நிகழ்ச்சியை காண கருங்குளம் மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
தொடர்ந்து கருங்குளம் தாமிரபரணி ஆற்றில் சுவாமி மீன் விளையாடி காலையில் ஆற்றின் கரையில் அலங்கரிக்கப்பட்ட ஸ்ரீனிவாசர் ஸ்ரீதேவி பூதேவியுடன் மீண்டும் மலையேறுவார்.


