ஸ்ரீவைகுண்டம் அருகே இரவு முதல் பெய்த மழையால் சாலையைத் தாண்டி செல்லும் மழைநீர். ஒரே நாள் பெய்த மழையால் முழங்கால் அளவுக்கு சாலையைத்த தாண்டிச் செல்லும் மழை நீரால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அவதி.
தூத்துக்குடி மாவட்டம் உள்பட 7 மாவட்டங்களில் இன்று காலை வரை பலத்த மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளான கருங்குளம், செய்துங்கநல்லூர், புதுக்குடி உட்பட பல்வேறு பகுதிகளில் நேற்று இரவு முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இந்த நிலையில் கருங்குளத்தில் இருந்து மூலைக்கரைப்பட்டி செல்லும் நெடுஞ்சாலைத்துறைக்கு சொந்தமான சாலையில் நேற்று இரவு முதல் பெய்த தொடர் மழையால் முழங்கால் அளவுக்கு தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
இதனால் அந்த வழியாக செல்லும் பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். மேலும் தொடர்ந்து மழை நீர் பெருக்கெடுத்து ஓடுவதால் சாலை ஓரம் சாலையில் அரிப்பு ஏற்படுகிறது. இதனால் சாலை சேதமடைவதுடன் அந்த வழியாகச் செல்லும் வாகனங்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பகுதியில் தடுப்பு வேலிகள் அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


