ஸ்ரீவைகுண்டம் தாலுகா கருங்குளம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட மணக்கரை மேலூர் கிராமத்தில் மருதூர் கீழக்காலில் இருந்து பிரியும் வாய்க்கால் பாலம் பாதை வழியாக விவசாயப் பணிகளுக்கும் சுடுகாட்டிற்கு செல்வதற்கும் பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர்.
இந்தநிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பொதுமக்கள் பயன்படுத்தி வந்த வாய்க்கால் பாலம் சேதம் அடைந்து இது சக்கர வாகனங்கள் கூட செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.
இதனால் பொதுமக்கள் விவசாய பணிகளுக்கு செல்வதற்கும் சுடுகாட்டிற்கு செல்வதற்கும் பெரும் சிரமப்பட்டு வந்தனர்.
இதனைத் தொடர்ந்து சேதமடைந்த நிலையில் உள்ள பாலத்தை சரி செய்ய வேண்டும் என அப்போது மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். ஆனாலும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாதால் பொதுமக்கள் போராட்டத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு கனிமொழி எம்பி, மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், ஓட்டப்பிடாரம் சட்டமன்ற உறுப்பினர் சண்முகையா ஆகியோர் சேதமடைந்த நிலையில் உள்ள பாலத்தை பார்வையிட்டு உடனடியாக அதை சரி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டனர்.
ஆனால் அதிகாரிகளின் தொடர் அலட்சியத்தால் தற்போது வாய்க்கால் பாலம் உடைந்து விழுந்துள்ளது. இதனால் பொதுமக்கள் ஊரைசுற்றிவரும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் மயானக்கரைக்கு சடலத்தை எடுத்துச் செல்ல மக்கள் ஊரை சுற்றிக்கொண்டு 2 கிமீ செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது.