தமிழ்நாட்டில் தற்போதுள்ள 32 மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையங்களை 14 ஆகக் குறைக்கும் அரசின் முன்மொழிவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று ‘எம்பவர் இந்தியா’ நுகர்வோர் அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
இது தொடர்பாக அவ்வமைப்பின் செயல் இயக்குநர் ஆ. சங்கர், தமிழக முதலமைச்சர், கூட்டுறவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதம் :
எளிய மக்களுக்குப் பாதிப்பு: மாவட்ட ஆணையங்கள் குறைக்கப்படும் பட்சத்தில், கிராமப்புற மக்கள், மூத்த குடிமக்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் ஏழை மக்கள் புகார்களைத் தொடர பிற மாவட்டங்களுக்கு மீண்டும் மீண்டும் பயணம் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். இது நேர இழப்பு, கூடுதல் செலவு மற்றும் மன உளைச்சலை உண்டாக்கி நீதியைப் பெறுவதைத் தடுக்கும்.
ஒரு மாவட்டத்தில் தற்காலிகமாகக் குறைந்த அளவிலான வழக்குகள் நிலுவையில் இருப்பதை மட்டுமே காரணமாக வைத்து ஆணையங்களை நிரந்தரமாக மூடக் கூடாது. மக்கள் தொகை, வங்கி, காப்பீடு, மின்-வர்த்தகம் ஆகியவற்றின் வளர்ச்சியால் எதிர்காலத்தில் புகார்கள் அதிகரிக்கக்கூடும்.
‘e-Jagriti’ மற்றும் மெய்நிகர் (Virtual) விசாரணை முறைகள் நேரடி மாவட்ட ஆணையங்களுக்குத் துணையாக மட்டுமே இருக்க வேண்டுமே தவிர, அவற்றிற்குப் மாற்றாக முடியாது. 32 மாவட்ட ஆணையங்களை 14 ஆகக் குறைக்கும் திட்டத்தை உடனடியாக நிறுத்தி, “ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நுகர்வோர் ஆணையம்” என்ற நிலையைத் தொடர வேண்டும்.
ஆணையங்களின் எண்ணிக்கையைக் குறைப்பதற்குப் பதிலாக, காலியாக உள்ள தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிகளை உடனடியாக நிரப்பி, உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். மாவட்ட வாரியான 5 ஆண்டுகால வழக்குத் தரவுகள், மக்கள் தொகை, பயணத் தூரம் மற்றும் போக்குவரத்து வசதிகளைக் கொண்டு வெளிப்படையான ‘நுகர்வோர் தாக்க மதிப்பீடு’ செய்யப்பட வேண்டும்.
இறுதி முடிவெடுப்பதற்கு முன்பாக நுகர்வோர் அமைப்புகள், செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்கும் விரிவான ஆலோசனைக் கூட்டங்களை நடத்த வேண்டும். “அரசின் செலவினம் குறைக்கப்படலாம், ஆனால் அத்தகைய குறைப்பு நீதியை நாடும் நுகர்வோருக்கு கூடுதல் செலவாக மாறக்கூடாது; நீதி நுகர்வோருக்கு அருகிலேயே இருக்க வேண்டும்” என்று ‘ எம்பவர் இந்தியா’ வலியுறுத்தியுள்ளது.


