திருச்செந்தூரில் இருந்து பாலக்காட்டுக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. மறு மார்கமாக பாலக்காட்டில் இருந்து திருநெல்வேலி வழியாக திருச்செந்தூருக்கு இந்த ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் இன்று மதியம் சுமார் 2.30 மணி அளவில் பாலக்காட்டில் இருந்து வந்த எக்ஸ்பிரஸ் ரயில் செய்துங்கநல்லூர் ரயில்வே ஸ்டேஷன் கீழ்புறத்தில் வந்து கொண்டிருந்தது. இந்த ரயில் செய்துங்கநல்லூர் ஸ்டேஷனில் நிற்காது என்பதால் வேகமாக சென்றது. அப்போது சுமார் 70 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தண்டவாளத்தினை கடக்க முயலும் போது ரயிலில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே இறந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்தவுடன் திருநெல்வேலி ரயில்வே போலிசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையில் அந்த பெண் அய்யனார்குளம்பட்டி அம்மன்கோயில் மேற்கு தெருவை சேர்ந்த மாலை என்பவர் மனைவி முத்தம்மாள்(67) என தெரியவந்தது.
செய்துங்கநல்லூரைப் பொறுத்தவரை அனைத்து பயணிகள் ரயில் மற்றும் எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரயில்வே நிலையத்தில் நின்றுத் தான் செல்லும். ஆனால் இந்த பாலக்காடு ரயில் பழனி ரயிலாக கொரோனா காலத்திற்கு முன்பு வரை செய்துங்கநல்லூரில் நிறுத்தப்பட்டு வந்தது. அதன்பின்னர் கொரோனா அச்சுறுத்தலால் ரயில்கள் நிறுத்தப்பட்டது. மீண்டும் ரயில் தொடங்கியபோது இந்த ரயில் பாலக்காடு விரைவு ரயிலாக மாற்றப்பட்டது. இந்த நிலையில் முத்தம்மாள் ரயில் செய்துங்கநல்லூரில் நின்று செல்லும் என்று நினைத்து ரயில்வே தண்டவாளத்தை கடந்திருக்கலாம் அப்போது இந்த ரயிலில் அடிப்பட்டிருக்கலாம் என எண்ணப்படுகிறது.