தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றில் உள்ள முள்செடிகள் மற்றும் புதர்களை அகற்றும் பணி கடந்த ஜுலை 6 ந்தேதி கலியாவூர் மருதூர் அணையில் துவங்கியது. இந்த பணியை கனிமொழி எம்.பி துவக்கி வைத்தார்கள். முன்னாள் மாவட்ட ஆட்சித்தலைவர் லெட்சுமிபதி முன்னிலை வகித்தார். எக்ஸ்னோரோ நி-றுவனத்தின் மூலம் வாடகை இல்லா இயந்திரம் மூலம் , தனியார் மற்றும் அரசு உதவியுடன் நதியை சுத்தப்படுத்தும் பணி தொடர்ந்து நடந்தது. மருதூர் அணை, செந்நெல்பட்டி, ஆழிகுடி, முத்தாலங்குறிச்சி ஆறாம்பண்ணை, கொங்கராயகுறிச்சி ஆகிய பகுதிகளில் இந்த பணி நடந்து முடிந்துள்ளது. தற்போது மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அவர்கள் ஆலோசனை படி நிதி பெறப்பட்டு மீண்டும் இந்த பணி துவங்கியுள்ளது.

இன்று (2.02.2025) ஸ்ரீவைகுண்டம் கணியான் காலனியில் இருந்து ஆற்றுக்கரைக்குள் உள்ள முள்செடிகளை அகற்றும் பணி ஸ்ரீவைகுண்டம் அனைத்து வியாபாரிகள் சங்கம் மேற்பார்வையில் துவங்கியது. இந்த நிகழ்ச்சிக்கு அனைத்து வியாபாரிகள் சங்க தலைவர் பெரியசாமி தலைமை வகித்தார். பேரூராட்சி மன்றத் தலைவர் சினேகவல்லி பாலமுருகன் முன்னிலை வகித்தார். எழுத்தாளர் முத்தாலங்குறிச்சி காமராசு வரவேற்றார். அதன்பின் இயந்திரம் துவக்கி வைக்கப்பட்டு முள்செடிகள் அகற்றப்பட்டது.
அனைத்து வியாபாரிகள் சங்க செயலாளர் பாலசுப்பிரமணியன், சட்ட ஆலோசகர் முத்துராமலிங்கம், மாவட்ட வணிக சங்க பேரமைப்பு துணைத்தலைவர் சந்துரு, வணிக சங்க பேரமைப்பு மாவட்ட செயலாளர் தங்கப்பழம் இசக்கி, பொருளாளர் ராமமூர்த்தி, துணைப் பொருளாளர் திருநாவுக்கரசு, கீழக்கால் பாசன உதவியாளர் ராஜ்குமார், சமூக ஆர்வலர் சித்திரை , கேபிள் சங்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
அனைத்து வியாபாரிகள் சங்கத்தின் மேற்பார்வையில் தாமிரபரணி ஆற்றுக்குள் மற்றும் கரையில் உள்ள முள்செடிகளை அகற்றி மரக்கன்று மற்றும் பனவிதை நடுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான ஏற்பாடுகளை செய்த மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அவர்களுக்கும் நதியை சுத்தப்படுத்த விலையில்லா இயந்திரம் தந்த எக்ஸ்னரோ நிறுவனத்திற்கும், பணி மேற்பார்வையாளரான பொதுப்பணித்துறை அதிகாரிகளுக்கு, ஸ்ரீவைகுண்டம் பொதுமக்கள் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டது.


