கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் பனையில் இனவிருத்தி மேம்பாட்டிற்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது.
தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தின் கீழ் இயங்கி வரும் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் மாநில மரமாகிய பனைமர ஆராய்ச்சிக்கான முன்னணி மையமாகும் வகையில் பயிர் மேம்பாடு சாகுபடி மதிப்பூட்டம் சார்ந்த ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
பல்லாண்டுகளாக பீகார், ஒரிசா, ஆந்திரா, கர்நாடகா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் இருந்து குட்டை தன்மை கொண்ட தாய் மரங்களில் விதைகள் சேகரிக்கப்பட்ட கல்லூரியின் தோட்டக்கலை பண்ணை ஆய்வு களத்தில் நடவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரையிலும் 265 வகைகள் பராமரிக்கப்பட்டு இம்மரங்களில் கூடுதல் பதநீர் மற்றும் பழங்கள் பெறுவதன் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக பனையில் இனவிருத்தி மேம்பாட்டிற்கான கலந்தாய்வு கூட்டம் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியில் நடந்தது.
கூட்டத்தில் கேரள மாநிலம் காசர்கோட்டில் அமைந்துள்ள மத்திய மலைபயிர்கள் ஆராய்ச்சி நிலையம் சார்ந்த விஞ்ஞானிகளும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பனை சார்ந்த ஆராய்ச்சியினை மேற்கொண்டிருக்கும் விஞ்ஞானிகளும் கலந்து கொண்டனர்.
மேலும் பனை சார்ந்த கூட்டுறவு சங்க அமைப்பினர், சுய உதவி குழுவினர், அரசு சாரா நிறுவன அமைப்பினர் கலந்துகொண்டு பனை இன விருத்தி நோக்கத்திற்கான தேவைகளை தெரிவித்தனர். கூட்டத்தில் கிள்ளிகுளம் வேளாண்மை கல்லூரியின் தோட்டக்கலைத்துறை பேராசிரியர் மற்றும் தலைவர் முனைவர் ரிச்சர்ட் கென்னடி வரவேற்புரையாற்றினார்.
கல்லூரியின் முதல்வர் ஆறுமுகம் பிள்ளை (பொறுப்பு) தலைமை வகித்து பனை மரத்தின் இன விருத்தி உத்திகளை கையாளும் முறைகள் பற்றி பேசினார். மத்திய மலை பயிர்கள் ஆராய்ச்சி நிலையத்தில் இயக்குனர் அனிதா கருன் சிறப்புரையாற்றி பனை மேம்பாட்டில் உயிர் தொழில் நுட்பவியலின் பங்கினை பறை சாற்றினார். நிலையத்தில் முதன்மை விஞ்ஞானிகளான முனைவர் நிரல், முனைவர் ரவிபட், முனைவர் அகஸ்டின் ஜெரால்டு போஸ்கோ மற்றும் விஞ்ஞானி சுமிதா பனை இன விருத்தி மேம்பாட்டுக்கான உருவவியல் பண்புகளை தேர்வு செய்யும் ஆய்வு குறித்து ஆலோசித்தனர்.
ஆந்திராவில் அமைந்துள்ள மற்றொரு முன்னணி மையமான பந்திரமாமுடி தோட்டக்கலை ஆராய்ச்சி நிலையத்தின் விஞ்ஞானிகள் முனைவர் ராஜேந்திர பிரசாத், வெங்கையா மற்றும் முனைவர் சுரேஸ் இந்த ஆய்வில் கலந்துரையாடினர்.
இதன் மூலம் பயனளிக்கும் கருத்துக்கள் பல இக்கூட்டத்தில் பதிவு செய்யப்பட்டது. கூட்டம் முடிவில் தோட்டக்கலை துறை இணை பேராசிரியர் முனைவர் மணிவண்ணன் நன்றி கூறினார்.
அதனைத் தொடர்ந்து பனைமரம் இருக்கும் இடத்திற்கு சென்று கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆராய்ச்சி பணியில் மேற்கொள்ளப்படும் முன்னேற்றங்கள் மற்றும் செயல்பாடுகள் அறிந்து இந்திய வேளாண்மை கழகத்தின் முதன்மை விஞ்ஞானிகள் ஊக்குவித்து பாராட்டினர்.


