தாமிரபரணிக் கரையில் தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயலில் தான் தமிழ்நாட்டில் முதல் அச்சகம் அமைக்கப்பட்டது. தமிழகத்தில் 1578&ஆம் ஆண்டு முதல் அச்சகத்தைக் கொண்டு வந்தவர் ஹென்டிரிக் ஹென்டிரிக்யூஸ் எனும் கிறிஸ்தவப் பாதிரியார்.
1578&இல் தூத்துக்குடி மாவட்டம், கடலோரத்தில் உள்ள புன்னைக்காயலில் பாதிரியார்கள் ஓர் அச்சகத்தைத் தொடங்கினார்கள். தமிழ்நாட்டில் தொடங்கப்பட்ட முதல் அச்சகம் இதுதான். இதைத் தொடங்கியவர் ‘ஹென்டிரிக் ஹென்டிரிக்யூஸ்’ பாதிரியார். இவர் ‘தமிழ் அச்சுக் கலையின் தந்தை’ என்று போற்றப்படுகிறார். தமிழிலேயே பாவமன்னிப்பு வழங்கிய முதல் பாதிரியார் இவர்தான்.
புன்னக்காயலில் 1578&இல் முதன் முதலில் ‘ஞானோபதேசம்’ என்ற நூல் அச்சிடப்பட்டது. அடுத்த ஆண்டு மீண்டும் ‘தம்பிரான் வணக்கம்’ அச்சிட்டார்கள். 1579&இல் ‘பாவ சங்கீர்த்தனம்’ வெளியானது. இந்த இரண்டு நூல்களும் ஒன்றாக லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள போட்லியன் நூலகத்தில் தற்போதும் காணப்படுகிறது.
தமிழகத்தின் முதல் அச்சகம், முதல் தமிழ்க் கல்லூரி, முதல் நூல் எனப் பெருமைகளைக் கொண்டது புன்னக்காயல்.
இந்த நிலையில் தான் அப்பகுதி மக்கள் புன்னக்காயலை தமிழ்நாட்டின் முதல் அச்சுக்கூடம் முதல் தமிழ் நூல் வெளியான இடம் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை விடுத்தனர். அதன் பயனாக இன்றைய தினம் தமிழக தொல்லியல் துறை தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் துறை அதிகாரி ஆசைத்தம்பி புன்னக்காயலுக்கு வருகை தந்துள்ளார்.
அவர் அந்த அச்சுக்கூடம் இருந்த இடத்தினை பார்வையிட்டு கள ஆய்வு மேற்கொண்டார். அந்த ஆய்வில் அவருக்கு வெளிநாட்டு கண்ணாடி ஜாடிகள், பச்சை நிற உலோக நாணயங்கள் மற்றும் அச்சகம் இருந்ததற்கான ஆதாரங்களையும், இரும்பு பொருட்களையும் கண்டுபிடித்துள்ளார்.
தொடர்ந்து அப்பகுதி மக்கள் இங்கு ஏற்கனவே கிடைத்த பொருட்களை வைத்து இந்த இடத்தில் தொல்லியல் ஆய்வு செய்ய வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை மனு, மற்றும் ஏற்கனவே கிடைத்த பொருட்களையும் அளித்தனர்.
இதுகுறித்து ஆய்வு மேற்கொண்ட தூத்துக்குடி மாவட்ட தொல்லியல் துறை அலுவலர் ஆசைத்தம்பி கூறுகையில்,
தூத்துக்குடி மாவட்டம், புன்னக்காயலில் தமிழ்நாட்டில் முதல் முதலாக அச்சுக்கூடம் அமைந்தது புன்னக்காயலில் தான் எனவும், அதை உறுதிப்படுத்தும் ஆதாரம் தங்களிடம் உள்ளதாகவும், எனவே இந்த புன்னக்காயல் பகுதியில் தமிழக தொல்லியல் துறையினர் முறையாக ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனற தமிழக முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்திருந்தனர்.
இந்த நிலையில் அந்த கோரிக்கை மனு அடிப்படையில் இன்று பார்வையிட்டேன். அப்பகுதி மக்கள் 1578 ஆம் ஆண்டுகளில் இங்கு அச்சுக்கூடம் இருந்ததற்கான ஆதாரங்களை காட்டினர். அந்த பகுதியில் மேலோட்டமாக கள ஆய்வு மேற்கொண்டேன். அப்போது அங்கு 14 நாயக்கர் கால செப்பு நாணயங்கள் கிடைத்தது. இதன் மூலம் இந்த பகுதியில் அச்சுக்கூடம் இருந்ததற்கான ஆதாரங்கள் உறுதியாகிறது. மேலும் இங்கு ஒரு பெரிய வளர்ச்சியான நகரம் இருந்துள்ளது தெரியவருகிறது. மேலும் அதே பகுதியில் சீனப்பானை ஓடுகளும் கிடைத்துள்ளது. இதன் மூலம் இங்கிருந்து வெளிநாடுகளுக்கு வாணிபத்தொடர்பு இருந்ததை உறுதி படுத்துகிறது. இந்த ஆய்வில் கிடைத்த பொருட்களை கொண்டு ஒரு முழுமையான அறிக்கையை தமிழக அரசுக்கு சமர்ப்பிப்போம் என அவர் தெரிவித்தார்.


