
தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள பள்ளங்கிணறு கிராமத்தைச் சேர்ந்த மகாராஜன் (51) மாரடைப்பால் உயிரிழந்தார்.
இந்த நிலையில் அப்பகுதியில் உள்ள சுடுகாட்டுக்குச் செல்ல வேண்டுமென்றால் அப்பகுதி குளத்தில் இறங்கி குளத்தின் வழியாகத்தான் செல்ல வேண்டும். தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கனமழை பெய்து வருவதால் பள்ளங்கிணறு குளம் பாதி நிரம்பிய நிலையில் காணப்படுகிறது. இதனால் இறந்த மகாராஜனின் உடலை அவரது உறவினர்கள் தங்களது உயிரைப் பணயம் வைத்து நீர் நிரம்பிய குளத்தில் இறங்கி இறந்த மகாராஜனின் உடலைப் பாதுகாப்போடு சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று இறுதிச் சடங்கு நடத்தினர். இப்பகுதியில் பல தலைமுறைகளாக வெயில் காலம் என்றால் இறந்தவரின் உடலை அடக்கம் செய்வதில் எந்த பிரச்சனையும் இல்லை. ஆனால் மழைக்காலத்தில் எவரேனும் இறந்து விட்டால் தங்களது உயிரைப் பணையம் வைத்து நீருக்குள் இறங்கி இறந்தவரின் உடலை ஆபத்தான முறையில் கொண்டு சென்று வருகின்றனர். அப்பகுதி மக்கள் மழைக்காலங்களில் இறந்தவரின் உடலைக் கொண்டு செல்வதற்காக அரசு சார்பில் ஒரு பாலம் கட்டி தர வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளனர்.